Pages

Sunday 14 September 2014

தமிழுக்கு யார் எமன்? தமிழ் வளர்க்கும் மந்திரம் - சிறுகதை

தமிழுக்கு யார் எமன்?  அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம் சிறுகதை 


'உலகத் தமிழ் அறிஞர்கள் மாநாடு' ஏற்பாட்டை வெகு சிறப்பாக செய்திருந்தார்கள். உலகத்தில் உள்ள பலத் தமிழறிஞர்கள் ஆர்வமாய் அதில் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் ஆர்வலர்கள் தமிழின் தொன்மையைப் பற்றியும், இலக்கணம், முத்தமிழ், காவிய காப்பியங்களைப் பற்றியும் செவிக்கு இனிய விருந்தாக தந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பில் பேச பேச அமர்ந்திருக்கும் கூட்டம் மெய் மறந்து ரசித்தனர். கடைசியாக தமிழழகன் பேச எழுந்தபோதே கரவொலி காற்றைப் பிளந்தது.

தமிழில் அவர் எந்த அளவுக்கு பற்றுடன் இருக்கிறார் என்பதை அவர் ஆற்றிய  சொற்ப்பொழிவில் தெளிவாகத் அனைவருக்கும் தெரிந்தது. அவர் முடிக்கும் போது    

தமிழே என் மூச்சு ! 
தமிழே என் பேச்சு 

தமிழோடு வாழுவோம் 
தமிழனாய் சிந்திப்போம் 

தமிழை காப்போம்  
தமிழைப் பரப்புவோம்


என்று முழங்க மீண்டும் நீண்ட நேர கரவொலி அனைவரும் எழுப்பி தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர்.

நல்லபடியாக மாநாடு முடிந்த கையோடு அனைவரும் கலைந்து போய்க்கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் "தமிழழகன் ஐயா !" என்ற குரல் அவரைத் திருப்பிப் பார்க்க வைத்தது.

"ஐயா என் பெயர் செந்தாமரை ! நான் ஏற்கனவே உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.


"ஓ ... ஆமாம். நல்ல ஞாபகம் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் சிலருக்கு மாநாடு முடிந்தவுடன் அவர்களுக்கு என் வீட்டில் விருந்து கொடுப்பதாக சொல்லியிருந்தேன். அவர்கள் எங்கே?" என்று ஆவலோடு கேட்டார்.

"அதோ அங்கே உங்களுக்காக காத்திருக்கிறார்கள்" என்று செந்தாமரை தமிழழகனை அழைத்துச் சென்றார்.

அங்கே அவரால் எளிதாக நம்பமுடியாத படி வெளிநாட்டவர் நால்வர் புன்னகையுடன் அவரை பார்த்து இருகை கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

"உங்க எல்லோரையும் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார் தமிழழகன்.

"இவர் தான் திருமதி அமாதெரசு - ஜப்பான் , திருமதி அக்லாய் - ரஷ்யா, திருமதி ஜெனிபர் - அமெரிக்கா, திரு ஜான்சன் - இங்கிலாந்திலிருந்தும் வந்திருக்கிறார்கள். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்" என்று செந்தாமரை அவர்களை அறிமுகப்படுத்தினார்.


"மாநாடு நல்ல சிறப்பாக இருந்தது. நீங்கள் நன்றாக பேசினீர்கள். உங்களை சந்திப்பதில் நாங்கள் மிகவும் பெருமைபடுகிறோம்" என்று சுத்தமான தமிழில் தெளிவாகப் பேசினர். அவர்களின் பேச்சு மழலை மொழி போல் இருந்தது.

"இன்றைக்கு நீங்கள் என்னுடைய விருந்தாளிகள். எங்கள் இல்லம் தங்களை அன்போடு அழைக்கின்றது" என்றார்.

"நாங்கள் தமிழர்களின் 'விருந்தோம்பல்' பற்றி படித்திருக்கிறோம். திருவள்ளுவர் திருக்குறளில் 'விருந்தோம்பல்' என்கிற ஒரு அதிகாரத்தில் பத்து குறள்களில் அதைப் பற்றி கூறியிருப்பதை படித்திருக்கிறோம்" என்று எதிர்பாராத வகையில் தமிழில் சொல்லிய விதம் தமிழழகனை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.


தமிழழகன் வீட்டிலிலும் தமிழ் வாசனை இருந்தது. 'எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்' என்று சொல்லுகின்றார் போல் எங்கு பார்த்தாலும் தமிழ் புத்தகங்கள் ஒரு நூலகம் போன்று நிறைந்து இருந்தன. ஆங்காங்கே 'இனிய தனித் தமிழ் பேசுவோம். பிறமொழி கலந்து பேசுவதை மறப்போம்' போன்ற தமிழ் வாசகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. 

இரவு நேர சிற்றுண்டி அவர்களுக்காக தயாராக வைத்திருந்தனர். விருந்தினர்களுக்கு அவர்களின் முறைப்படி தட்டுகளில் இட்லி, தோசையும் அதன் பக்கத்தில் முட்கரண்டிகளும் வைத்திருந்தனர். ஆனால் தமிழழகனுக்கு வாழை இலையில் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்தவுடன் அவசரம் அவசரமாக வெளிநாட்டவர் ஒருவர் "எங்களுக்குப் பரிமாறுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் !" என்று தடுத்தனர். 

'எதற்கு தடுக்கிறார் ? ஒருவேளை அவருக்கு இந்த உணவு பிடிக்கவில்லையா !' என்று ஒருவகை குழப்பத்துடன் தமிழழகன் அந்த வெளிநாட்டவரை பார்த்தார்.

"நீங்கள் எதை சொல்லியிருக்கிறீர்கள் ? ஆனால் எதை செய்கிறீர்கள்?" என்று புதிர் போட்டார் அந்த வெளிநாட்டவர்.

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே?" என்று மிரட்சியடைந்தார்.

"அதோ அந்த வாசகம் படியுங்கள்" என்று அவர் கூற தமிழழகன் தனக்கு எதிரில் இருக்கும் வாசகத்தை மீண்டும் படித்தார்.  

"'இனிய தனித் தமிழ் பேசுவோம். பிறமொழி கலந்து பேசுவதை மறப்போம்'. இதில் என்ன தவறு இருக்கின்றது? சொல், எழுத்துப் பிழை ஏதுமில்லையே !" என்றார்.


"பிழை ஏதும் இல்லை தான். ஆனால் இதற்கு அர்த்தம் என்ன?" என்று மறுபடியும் கேட்டார்.

"அது தானா உங்கள் சந்தேகம். அதன் அர்த்தம் மிக எளிது. அதாவது 'தமிழ் மொழி பேசும்போது பிறமொழி கலவாமல் தனித்தமிழாய் பேசவேண்டும்' அவ்வளவு தான்" என்றார்.

"தமிழ் பேசும் போது மட்டும் பிறமொழி கலவாமல் பேசினால் போதாது. உண்ணும் போதும் தமிழ் கலாச்சாரம் மாறக் கூடாது. அதாவது நாங்க உண்ண இருப்பது இட்லி, தோசை என்கிற தமிழ் வகை உணவுகள். ஆகையால் நீங்கள் எங்களுக்கும் வாழை இலையில் பரிமாறாமல் எங்கள் கலாச்சாரப் படி அதாவது உங்கள் அந்நியக் கலாச்சாரப்படி தட்டுகளும், முட்கரண்டிகளும் எதற்கு? நாங்களும் வாழையிலை போட்டு கையில் சாப்பிடுவது தானே முறை" என்று விளக்கம் தெரிவிக்க தமிழழகன் அதிர்ச்சியில் உறைந்தான்.

"எங்களுக்கு எங்களுடைய பாரம்பரிய உணவு தான் எப்போதும் பிடிக்கும். ஆனால் வந்திருக்கும் இடத்தில் அதை எதிர்பார்ப்பது முறையல்ல. அப்படி எங்கள் உணவே உண்டால் இந்த தமிழ் கலாச்சார அனுபவம் எங்களுக்கு இல்லாமல் போகுமே! ஆகையால் உண்பதிலும் எங்களுக்கு தமிழ் கலாச்சாரம் தான் வேண்டும்" என்று விரும்பி ஏற்று அவர்கள் உண்ட விதம் தமிழழகன் கண்களின் இமைகள் மூடாமல் பார்த்து ரசித்தாலும் இந்த வேளையில் 'யானைக்கும் அடிசறுக்கும்' என்கிற பழமொழி அவருக்கு நினைவு வந்தது.

எல்லோரும் திருப்தியாக உண்டபின் தமிழ் மொழியைப் பற்றி பேச ஆரம்பித்தனர். 


"தமிழழகன் ஐயா, இந்த புத்தகம் என்னவென்று தெரியுமா?" என்று கையில் இருக்கும் புத்தகத்தை காட்டினார் ஒரு வெளிநாட்டவர். 

நன்றாகப் பார்த்த பிறகு "இது திருக்குறள், ஆங்கில மொழி பெயர்ப்பு" என்றார்.

"சரியாகச் சொன்னீர்கள். ஆனால் இந்த புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்காமல் இருந்திருந்தால் உங்கள் தமிழின் அருமை, பெருமைகளை எங்களால் தெரிந்திருக்க முடியாது. நம் நால்வருக்கும் எங்கள் தாய்மொழி தவிர சில பிரபல மொழிகளும்  தெரியும். மொழிகள் அறிவை விருத்தி செய்வதற்கும், எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கும் உதவும் ஒரு ஊடகம். அதில் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. ஒரே மொழி மட்டும் படிப்பதால் அல்லது அதில் வெறியாய் பின்பற்றுவதில் எவ்வித பலனும் இல்லை. நான் ஒரு ஜப்பானியர். எனக்கு ஜப்பான் மொழி தெரிந்த ஒரு தமிழரால் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டேன். அதே போல் ஆங்கிலம், ரஷ்யா மொழிகள் தெரிந்த தமிழரால் தான் இவர்கள் தமிழை நன்றாக கற்று இருக்கிறார்கள். நாங்கள் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உலகத்தில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்கிற பெருமை இருந்தாலும் , அது இன்றளவும் அழியாமல் இருக்கின்றது என்பது தான் தமிழின் சிறப்பு. அந்த வகையில் ஆதியில் நாங்களும் தமிழர்களாகத் தான் இருந்திருப்போம். எங்களால் பல மொழி கற்கும் திறமை இருக்கும்போது உங்களுக்கும் அந்தத் திறமை கட்டாயம் இருக்கும் " என்று சொல்ல தமிழழகனுக்கு இரண்டாவது அடி சறுக்கியது.

மெல்ல தலையாட்டி 'நீங்கள் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை' என்று ஒத்துக்கொண்டான்.

அசட்டுச் சிரிப்புடன் ஒரு பிரபல வாரப் பத்திரிக்கையை கொடுத்தார். மற்றவர்களும் சில புத்தகங்களை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தனர்.

"தமிழழகன் ஐயா, இந்த கதையில் மட்டுமல்ல ! பல இடங்களில் 'புதுமை என்கிற பெயரில் மம்மி, டாடி , அங்கிள், ஆண்டி, சார், பஸ் , ரயில், ஸ்கூல், காலேஜ், ஆபீஸ், ஆட்டோ, பிசினஸ், சந்தோஷம் , ரோஜா, கஷ்டம், ராஜா, அங்காடி, ரோடு, ஸ்ரீ , புஷ்பம் , இஷ்டம், டாக்டர், சன், டாட்டர், வாட் இஸ் யுவர் நேம்? க்ளாட் டு மீட் யூ ! வாட் டு யூ மீன் ? ' என்றெல்லாம் வருகின்றதே அதெல்லாம் பிறமொழி தானே. மேலும் தமிழ் இனிமை குறைக்கும் வண்ணம் தமிழ் வார்த்தைகளை சிதைத்து 'வந்திடுச்சி, போயிடுச்சி, புரிஞ்சிருச்சி' என்றும் வருகின்றது. இதற்கும் மேலாக  தமிழர்கள் தங்கள் பெயர்களை கூட தமிழில் வைக்க மறந்துவிட்டனரே?  இப்படி இருந்தால் தமிழ் மொழி எப்படி வாழும்? 'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ ?' என்று பாடிய பாரதி மட்டும் இதைப் பார்த்திருந்தால் 'தமிழனே தமிழுக்கு எமனாவதை தடுப்போம் , மீறினால் அந்த எமனை தீயிலிட்டு பொசுக்குவோம்' என்று பாடியிருப்பார். ஏன் உங்களைப் போன்றவர்கள் இதை கண்டும் காணாதது போல் உள்ளீர்கள்? இது தமிழ் மொழிக்கு மட்டும் இழுக்கு அல்ல. பிற மொழியை அப்படியே தமிழில் எழுதினால் அந்த மொழிக்குமல்லவா இழுக்கு! தமிழில் இல்லாத கலைச் சொற்களா பிறமொழிகளில் உள்ளது. உங்களைப் போன்றோர் நினைத்தால் இனிமையான அந்தத் தனித் தமிழை திரும்பவும் கிடைக்கும்" என்றார் அந்த வெளிநாட்டவர்.

'முயற்சி செய்கிறேன்' என்று தலையாட்டிக்கொண்டே தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தார். தமிழ் பாடல்கள் கேட்டனர். ரசித்தனர். பாட்டு முடிந்தவுடன் 'ஓகே விவ்வர்ஸ். வெல்கம் பேக் டு மெலோடி சாங்க்ஸ்' என்று ஒரு பெண் கத்த எல்லோரும் தமிழழகனைப் பார்த்தார்கள்.

உடனே ஒரு வெளிநாட்டவர் "நான் பெருமைக்காக இதை சொல்லவில்லை. இதே தொலைகாட்சியில் ஆங்கில ஒளிபரப்பு ஏதாவது போடுங்கள்" என்று சொல்ல தமிழழகன் உடனே ஆங்கிலப் படம் ஓடும் எண்ணை அழுத்தினார். எல்லோரும் ஐந்து நிமிடங்கள் பார்த்தனர். 


"இதில் ஏதாவது பிறமொழி கலந்து வருகின்றதா? நாங்கள் எங்கள் மொழியோடு பிறமொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். பிறமொழி கலப்பதை அறவே விரும்பமாட்டோம்" என்று சற்று உணர்ச்சிவசத்துடன் பேசினார் அந்த வெளிநாட்டவர். 

அவரே தொடர்ந்து "உங்களிடத்தில் கடல் போல தமிழ் நூல்கள் இருக்கின்றதே? இவற்றில் எவையெல்லாம் கணினி வலைதளத்தில் இருக்கின்றது என்று உங்களால் காட்டமுடியுமா? இதுநாள் வரை உள்ள காவியம், இலக்கியம்,இலக்கணம், மருத்துவம், ஆராய்ச்சி கட்டுரைகள் போன்ற எல்லா தமிழ் படைப்புகளையும் வலைதளத்தில் பதிவு செய்தால் தான் உலகத்தில் எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் தமிழின் பெருமைகளை அறிய முடியும். அவைகளை எங்கள் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யும்போது தமிழின் சிறப்பு இந்த உலகுக்குத் தெரியும். தமிழ் மொழியும் அழியாமல் இருக்கும்" என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தனர்.                           

தமிழழகனுக்கு மேற்கொண்டு சொல்ல வார்த்தைகள் வராமல் மௌனம் காத்தார்.

இதுவரை தமிழில் தான் பேசியது போதும்.இனிமேல் ஒவ்வொரு இதழிலும், பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் யாரேனும் பிறமொழியினை பயன்படுத்தினால் அதை சுட்டிக்காட்டி அதற்கு இணையாக உள்ள தமிழ் சொல்லை கட்டாயம் தமிழ் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிற வெறி அவர் மனதினுள் எழுந்தது. இதை கட்டாயம் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 'நீ கத்துவது கத்திட்டே இரு. நாங்க பேசுறது, எழுதுறது எழுதிட்டே இருப்போம். நாங்க யாரும் நீங்க சொல்வதை கேட்க மாட்டோம்' என்று அலட்சியமாய் பேசிடுவார்கள். இனிமேலும் இப்படியே விட்டுவிட்டால் கூடிய விரைவில் தமிழ் மொழி அழியும் அபாயம் வந்துவிடும்.அதைத் தடுத்தே தீர வேண்டும். உலக மொழி ஆராய்ச்சியாளர்கள் கூடிய விரைவில் அழிகின்ற மொழியில் தமிழும் ஒன்று என்கிற கூற்றை பொய்யாக்க வேண்டும்!' என்று சபதம் எடுத்துக்கொண்டார் தமிழழகன். 


மறுநாள் தமிழழகன் , பிரபலங்கள், பத்திரிக்கை, ஊடகங்கள் மற்றும் மக்கள் பேசும் தமிழில் , எழுதும் தமிழில் பிறமொழி கலந்திருப்பதை வெளிச்சம் போட்டு காட்ட கணினியில்  'இது தமிழா? எமனா?' என்கிற பெயர் விலாசத்துடன் ஆரம்பித்து 'மீண்டும் பாரதி' என்கிற புனைபெயருடன் எழுத ஆரம்பித்தார். அதோடு நில்லாமல் கணினி அறிவு கொண்ட தமிழ் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி பல நூல்களை வலைதளத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தார்.

இனி தமிழ் வளரும். எந்நாளும் அழியாத மொழியாக உலகில் வலம் வரும் என்கிற நம்பிக்கை தமிழழகனுக்குப் பிறந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
)))))))))))))))))))))))))))))))))))))))))))))((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((