Pages

Wednesday 18 January 2017

அழுத்தமானப் பதிவு - சிறுகதை

அழுத்தமானப் பதிவு
சிறுகதை
மதுரை கங்காதரன்

'நேற்றும் இன்றும் குணத்தில் மாறாத, நாளையும் மாறாமல் உறுதியாய் இருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவனும், இன்றைய தொழிலதிபருமான திரு கோ. செல்லையா அவர்களே வருக! வருக!!' என்கிற ஆழமான வாசகம் அடங்கிய அழைப்பும், விழா பற்றிய நிகழ்ச்சி நிரலும் பள்ளி நுழைவுவாயிலில் அடக்கமாகக் கட்டப்பட்டு இருந்தது.

விழா அமைப்பாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவமணிகள் அந்தக் கௌரவ விருந்தினருக்காக, ஆவலின் பெருக்கத்தோடு வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

"இந்நேரம் தொழிலதிபர் வந்திருக்கனுமே. அவர் ஒருபோதும் நேரம் தவறாதவர்" என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நம்பிக்கையுடன் பேசிய பேச்சைக் கேட்ட விழா அமைப்புத் தலைவர்," ஐயா, இது வரை எந்த ஒரு புதிய வாகனமும் உள்ளே வரவில்லை. ஒருவேளை இன்று அவருக்கு அவரசர வேலை வந்துவிட்டதோ என்னவோ? அப்படி இருந்தாலும் அவர் நமக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருப்பாரே! ஆகையால்..." என்கிற அவர் பேச்சை முழுவதும் முடிக்கவிடாமல்,
"விழா வரவேற்பாளர்கள் அனைவரும் மிதிவண்டிகள் நிறுத்தும் இடத்திற்குச் செல்லுங்கள்" என்று அவர்களை தலைமை ஆசிரியர் அவசரப்படுத்தினார்.

கூட்டத்தோடு கூட்டமாக வந்த ஒருவர் தனது மிதிண்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு வந்தார். அதற்கான அடையாள வில்லை கொடுக்கும் அதன் காப்பாளர், அந்த மிதிவண்டியைப் பார்த்தபோது 'இந்த மிதிவண்டி எனக்குப் பழக்கமான வண்டியாயாற்றே. அடிக்கடி இதனைப் பார்திருக்கிறேன். ஆனால் சில வருடத்திற்கு முன்னால் பார்த்தது. சமீபத்தில் பார்க்கவில்லை' என்று யோசித்துக் கொண்டே வில்லையை அவர் கையில் ஏறெடுத்துப் பார்த்துக் கொடுக்கும்போது,
"ஐயா, நீங்க... நீங்க... செல்லையா ...தொழிலதிபர்..." என்ற காப்பாளரின் கண்கள்  ஆனந்தக் கண்ணீரில் நனைந்தது.

அதற்குள் விழாவுக்கு வந்த கூட்டம் மிதிவண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு பொதபொதவென்று வந்ததோடு சில வினாடியில் அந்த இடத்தையே ஆக்கிரமித்துக் கொண்டது. சற்று நேரத்தில் அந்த இடம் தற்காலிகமாக விழா நடத்தும் இடமாக மாறியிருந்தது.

அங்கு வந்த மாணவ மாணவியர்கள் தொழிலதிபர் திரு செல்லையா அவர்கள் தனது மிதிவண்டியை அங்கு நிறுத்திவிட்டு வருவதைக் கண்கொள்ளாக் காட்சியாக கண்டு ரசித்தனர். அனைவரின் முகத்திலும் அந்தப் பதிவு இதயத்தில் நுழைந்து ஆழமாகத் தைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அனைவரின் உடலில் குதூகலமும், முகத்தில் பிரகாசமும், புத்துணர்வும், நம்பிக்கையும் ஒருங்கே சேர்ந்திருந்தது நன்றாகத் தெரிந்தது. அவர் அந்த இடத்திலிருந்து விழா மேடையை நோக்கி நடக்க நடக்க, அவர் பின்னே கூட்டம் நடந்து சென்றது. எத்தனை மணி நேரம் விழாவில் பேசினாலும் இந்த ஒரு செயலுக்கு ஈடு இணை வரவே வராது என்று கூட்டம் பேசிற்று.
                                   
சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர், "இந்த நாள் இப்பள்ளியில் படிக்கின்ற மாணவமணிகளுக்கு ஒரு நன்னாள். பல தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரராகிய திரு செல்லையா அவர்கள் மிதிவண்டியில் வந்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார். எனக்கு இந்த யோசனை வரவில்லை. அதோடு பொறாமையாகவும் இருக்கின்றது. எனது வீடு நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கின்றது. நானும் அப்படி வந்திருக்கலாம். அத்தகைய சிறந்த முத்தை உருவாக்கித் தந்த அத்தனை ஆசிரியப் பெருமக்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கின்றேன். இங்கு நான் நான்கு சக்கர வாகனத்தில் வந்தது  அவமானமாகக் கருதுகிறேன். கல்வி அமைச்சராகிய நான் மாணவமணிகளுக்கு முன்மாதிரியாக இல்லாமல், அவர்களின் பேராசையைத் தூண்டும்படி நடந்து கொண்டேன். இனிமேல் நானும் சிறிய தூரம் எங்காவது செல்வதாக இருந்தால் கட்டாயம் மிதிவண்டியில்தான் செல்வேன். எனக்கு இந்த ஞானம் கொடுத்த தொழிலதிபர் திரு செல்லையா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி" என்று கூறி அமர்ந்த கல்வி அமைச்சருக்கு கரவொலி கொடுத்து அக்கூட்டம் கௌரவித்தது.

அதற்கடுத்து தொழிலதிபர் திரு செல்லையா அவர்கள் பேச எழுந்தபோது அக்கூட்டமே எழுந்து நின்று விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அது அடங்க சில வினாடிகள் பிடித்தது. " மாணவமணிகளே! இன்று நான் மிதிவண்டியில் வந்ததைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நானும் உங்களைப் போல பள்ளிக்கு நடையாகவும், மிதிவண்டியிலும் வந்தவன். பள்ளிக் கல்லூரி முடித்த பிறகு எனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி, நன்றாக உழைத்து இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். ஏன் உங்களாலும் என்னைப் போன்று, ஏன் அதற்கு மேலும் வாழ்கையில் உயரலாம். என்னுடைய முன்மாதிரி திரு அப்துல் கலாம் அவர்கள். அவர்களின் இந்திய வல்லரசுக் கனவை நனவாக்க, நம் நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு நம்நாட்டு இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும். அதிகமாக இறக்குமதியைச் செய்யும் கச்சா எண்ணெய்யை குறைக்க வேண்டுமென்றால் கூடிய மட்டும் நமது வாகனத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். முதன்முதலாக நாம் விண்ணில் செலுத்திய விண்கலம் மாட்டு வண்டியிலும், மிதிவண்டியிலும் பயணித்தது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். ஆகவே மாணவமணிகளே, நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடித்து, அறிவைப் பெருக்கி விவசாயம், மருத்துவம், மின்சாரம், கணினிக் கல்வி, தொழில், சேவை ஆகியவற்றில்  மக்களுக்குத் தேவையானத் தொழில்நுட்பத்தைத் தந்து இந்தியாவை வல்லரசாக மாற்ற அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். வாழ்க இந்தியா, வாழ்க இந்திய மக்கள்" என்று அழுத்தமான பதிவாக உரையாற்றி அமர்ந்தபோது அனைவருக்கும் புதுத்தெம்பு வந்ததுபோல் உணர்ந்தனர். அதை உறுதி செய்யும் வண்ணம் அக்கூட்டம் மீண்டும் கரவொலி கொடுத்தது.

88888888888888888888
                


No comments:

Post a Comment