Pages

Sunday 24 August 2014

ஒரே விலைக் கதை - சிறுகதை


ஒரே விலைக் கதை 

சிறுகதை 
மதுரை கங்காதரன் 

இந்த முறையாவது தன் கணவரிடத்தில் தான் வகைவகையாய் செய்து வைத்திருக்கும் சமையல்களை காட்டி பாராட்டை பெறவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள் கவிதா. 

'உனக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லை! நீ வாங்குறது எல்லாமே சொல்லிக்கொள்ளும் படியே இல்லை! நீயும் உங்கம்மா மாதிரி பழைய பஞ்சாங்கம் தான்' என்று ஒவ்வொரு முறையும் குத்திக்காட்டி பேசுவதில் அவள் கணவர் சத்திய சீலன் வல்லவர். 

எப்படியும் அவர் வாயார தன்னைப் பாராட்ட வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் தான் வாங்கும் எந்த பொருளையும் நிதானமாகப் தெளிவாகப் பார்த்து பார்த்து வாங்கியும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லையே  என்று அவள் எண்ணுகின்ற போது வாழ்கையில் சலிப்பு தான் உண்டாகும் கவிதாவுக்கு. 

இதைப்பற்றி பல முறை கவிதா தன் அம்மாவிடம் சொல்லுற போது 'கொஞ்சம் பொறு கவிதா! நீ எவ்வளவு நல்லதா வாங்கினாலும் மாப்பிள்ளைக்கு எந்த காரணத்தினாலே பிடிக்கலேன்னு என்னாலே இப்போ ஓரளவு கணிக்க முடியுது. ஆனால் இன்னைக்கு நீ செய்திருக்கும் சமையலை சாப்பிடும் போது மாப்பிள்ளை எப்படி நடந்துக்கிறார்?ன்னு நான் கவனிக்கிறேன். பிறகு அவருக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை உன்கிட்டே சொல்றேன்' என்று சொல்லியது அவளுக்கு ஆறுதலைத் தந்தது.


இருந்தாலும் அவளுக்கு ஒரு நப்பாசை. 'தன் அம்மா நினைப்பது போல கணவரிடம் ஏதும் ஒளிவு மறைவு இருக்காது' என்கிற ஒருவித குருட்டு நம்பிக்கை அவளிடத்தில் இருந்தது. அவள் எதிர்பார்க்கும் நேரத்தில் சத்தியசீலன் வீட்டிற்குள் நுழைந்தான். சமையல் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.

"இன்னைக்கு என்ன சமையல்? கமகமன்னு இருக்கு. ஒரு பிடி புடிச்சுடுறேன்" என்று சொன்னவுடனே கவிதாவுக்கு பாதி பாராட்டு கிடைத்ததாக கருதினாள். சாப்பிட்ட பிறகு மீதி பாராட்டு கிடைக்கும் என்று நம்பினாள்.

'கவிதா, மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டதாலே ரொம்ப பெருமைபடாதேம்மா. சிலர் உள்ளே ஒண்ணும் வெளியே ஒண்ணும் வைச்சுகிட்டு பேசுவாங்க. கொஞ்ச நேரத்திலே மாப்பிள்ளை மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு சொல்லிடுறேன்" என்று கவிதாவின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டாள் அவள் அம்மா. 


இருந்தாலும் மிகவும் ஆர்வமாக புன்னகையுடன் கணவனுக்கு பரிமாறத் தொடங்கினாள். சற்று தூரத்திலிருந்து  நடப்பதை உன்னிப்பாக கவனித்தாள் கவிதாவின் அம்மா.

"கவி..இது என்ன ? புது மாதிரியா இருக்கு?" என்று சத்தியசீலன் ஆசையைக் கேட்டான்.

"அதுங்களா? கத்தரிக்காய் கூட்டு. கிலோ முப்பது ரூபாய் விக்கிறதை நான் சாமர்த்தியமாய் பேசி இருபது ரூபாய்க்கு வாங்கினேன். நல்லா இருக்குங்களா?" என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.  


"சுமாரா இருக்கு. அவ உன்னை நல்லாவே ஏமாத்திருக்கா. பதினைந்து ரூபா கத்திரிக்காயை முப்பது ரூபா சொல்லி உன் தலையிலே இருபது ரூபான்னு கட்டிட்டா. இது என்ன வெண்டக்கா சாம்பரா? கிலோ நாற்பது ரூபா சொல்லியிருப்பா. நீ பேசி முப்பது ரூபாய்க்கு வாங்கியிருப்பே?" என்று சத்திய சீலன் முந்திக்கொள்ள அவளும் 'ஆமாம்' என்று தலையாட்டினாள்.

"சமையல்லே நீ தேற மாட்டே?" என்று வழக்கம் போல விமர்சித்தான்.

இவ்வாறு பேசியதை சற்றும் எதிர்பார்க்காத கவிதா ஏதும் புரியாமல் சிலையானாள். ஆனால் அனைத்தையும் கவனித்த அவள் அம்மாவுக்கு எல்லாமே விளங்க ஆரம்பித்தது.

"அம்மாடி கவிதா! மாப்பிள்ளைக்கு நீ எது வாங்கினாலும் அவருக்கு பிடிக்காத காரணம் எனக்கு தெரிஞ்சிருச்சி. இனிமேல் அதுபத்திக் கவலைப்படாதே. நாளையிலிருந்து அவர் எப்படி உன்னை பாராட்டுகிறாருன்னு மட்டும் பாரு"  என்று கவிதாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.   

மறுநாள் புதிதாக வாங்கிய கண் கவர் வண்ணமயமான சேலையும், காலுக்கு ஏற்ற அழகான செருப்பையும் தன் கணவனிடம் காட்ட ஆயுத்தமானாள்.

சத்தியசீலன் வந்தவுடன் தயாராக வைத்திருந்த சேலை மற்றும் செருப்பு பார்சலை அவன் கண் முன் வைத்தாள். 

வழக்கம் போல " இந்த சேலை எவ்வளவு?"ன்னு சற்று நக்கலாகக் கேட்டான்.

"நான் எப்போதும் இருநூறு, முந்நூறு ரூபாயிலே தான் சேலை வாங்குவேன். ஆனா அந்த மாதிரி வாங்கிறது இந்த தடவை எனக்கும் உங்களைப் போல அதெல்லாம் பிடிக்கல்லே. இந்த சேலை இப்போ தான் புதுசா விற்பனைக்கு வந்திருக்கும் சேலைன்னு கடையிலே உள்ளவங்க சொன்னாங்க. விலையே கேட்டேன். ஆயிரத்து அறுநூருன்னு சொன்னாங்க. உடனே 'பில்' போடுன்னு சொல்லீட்டேன். எப்படீங்க இருக்கு?"

"ஆஹா இப்போ தான் உருப்பிடியா ஒரு காரியத்தை செய்திருக்கே. என்னமாய் இருக்கும். கலர் என் கண்ணைப் பறிக்குது. இதை கட்டிட்டுப் பாரு அந்த தேவதை கூட உன் அழகுக்கு ஈடு இணையாக மாட்டா !" என்று கவிதாவை சத்தியசீலன் புகழ அவளோ தூரத்தில் இருக்கும் தன் அம்மாவுக்கு தன் கட்டை விரலை உயர்த்துக்காட்டி 'வெற்றி' என்று சொல்லாமல் சைகை செய்தாள். 

இன்னும் அவனிடத்தில் புன்னகை மறையாமலும் கண்களில் பிரகாசம் குறையாமலும் இருப்பதை அவள் கவனித்தாள். 

"ஆமாம், செருப்பு வாங்குவதாக சொன்னாயே. வாங்கிட்டியா கவி" என்று முதல் முதலாக ஆர்வமாய்க் கேட்டான்.

" இதோ பாருங்க" என்று பார்சலைப் பிரித்து அவனிடத்தில் காண்பித்தாள்.

"இது எவ்வளவு கவி?" என்று கேட்டான்.

"போன தடவை நூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு செருப்பு வாங்கினேன். அது உங்களுக்கு சுத்தமா பிடிக்கல்லே. அதனாலே இந்த செருப்பு வாங்கினேன். காலுக்கு இதமா குளிர்ச்சியா இருக்கும்ன்னு சொன்னாங்க. என்னோட காலுக்கு ரொம்பவே நல்லா இருந்துச்சி. விலையைக் கேட்டேன். எண்ணூறு ரூபாயின்னு சொனாங்க. உடனே மறு பேச்சு பேசாம வாங்கிட்டேன்" என்று கூறினாள்.

"அற்புதம். உன் காலுக்கு, சும்மா சொல்லக் கூடாது. எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? ரொம்ப நல்லா இருக்கு" என்று இன்னொரு முறையும் வாயாரப் பாராட்டினான். இப்போதும் 'வெற்றி' என்று தன் அம்மாவுக்கு சைகை காட்டினாள்.

"கவி! எனக்கு இப்போ ரொம்ப திருப்தியா இருக்கு. பரவாயில்லை நீ எல்லாத்துலேயும் தேறிட்டே" என்று கூற கவிதா மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றாள்.


சரியாக நான்கைந்து நாட்கள் தான் சென்றிருக்கும். 

"ஏங்க ! ஒரு ஐயாயிரம் ரூபாய் தாங்க. காய்கறிங்க, மளிகை சாமான்ங்க வாங்கணும். இப்போதெல்லாம் நான் மளிகை சாமாங்ன்க எப்போதும் வாங்குற கடையிலே வாங்கிறதில்லீங்க. பெரிய ஸ்டோர்லே தான் வாங்குறேன். விலை அதிகமா இருந்தாலும் சரக்கு தரமா இருக்கு பாருங்க" என்று சற்று பெருமையாகச் சொன்னாள்.

"என்னம்மா கவி? முன்னமெல்லாம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தா மாசக்கடைசியிலே ஆயிரம் ரூபாய் மிச்சம் இருக்குன்னு சொல்லுவே. இப்போ என்னான்னா ஒரு வாரத்துக்கு ஐயாயிரம் ரூபாய் கேட்கிறே" என்று கேட்டான் சத்தியசீலன்.

"என்னாங்க செய்றது. உங்களுக்கு விலை குறைவா எந்த பொருளும் வாங்கினா பிடிக்கிறதில்லே. அதனாலே எது வாங்கினாலும் விலை அதிகமா இருந்தாலும் தரமா வாங்குறேன். அது தானே உங்களுக்கும் பிடிக்குது" என்று சொல்லிக் காண்பித்தாள்.

"கவி. உண்மையா சொல்லப் போனா. நீ அப்போ வாங்கிய பொருளும், இப்போ வாங்கிய பொருளும் தரம் எல்லாமே ஒரே மாதிரியாத்  தான் இருக்கு. நீ விலையை குறைச்சி வாங்கினதாலே அதோட தரத்தையும் குறைவா எடை போட்டேன். விலையை கூட்டி வாங்குறது பெரிய கௌரவம்னு நினைச்சேன். நீ எப்போதும் போல குறைச்சு வாங்குவேயே அப்படியே வாங்கு. அது தான் நல்லா இருக்கு. நம்ம வரவுக்குள் அது அடங்கும்" என்று வீட்டின் சூழ்நிலையை முதல்முதலாக உணர்ந்து பேசினான் சத்தியசீலன்.


"அப்படீன்னா. இந்தாங்க மூவாயிரம் ரூபாய்" என்று ரூபாயை நீட்டி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள். 

"என்னம்மா கவி! இந்த பணம் ஏது?"

"இது நீங்க கொடுத்த பணம் தாங்க. நான் எப்போதும் போல எல்லாப் பொருளையும் விலை குறைவா வாங்குற இடத்திலே தான் வாங்கினேன். ஆனா உங்ககிட்டே விலையை மட்டும் நான்கைந்து மடங்கு அதிகமா சொன்னேன். நீங்களும் நல்லா இருக்குன்னு சொன்னீங்க. உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும்னு நினைச்சேன். நீங்க மட்டுமில்லீங்க. பொதுவா எல்லோரும் பெரிய இடங்களிலே விலை அதிகம் கொடுத்து ஏமாந்து வாங்குறது தான் கௌரவம்னு நினைக்கிறாங்க. உண்மையில் நம்மோட பலவீனத்தை நல்லா புரிஞ்சிகிட்டு விலையை அதிகம் சொல்லி அப்படி இப்படின்னு இனிமையா பேசுறதாலே அதை அதிகம் விலை கொடுத்து ஏமாந்து வாங்கிறோம். அதை உங்களுக்கு செயலாலே புரிய வைக்கிறதுக்கு தான் என் அம்மா சொல்லி நான் போட்ட நாடகம்" என்று குட்டை உடைத்தாள்.


"உங்கம்மா பழைய பஞ்சாங்கம்னு குறை சொன்னேன். ஆனா அவங்ககிட்டே தான் அறிவும் , திறமையும் இருக்கு. இனிமே விலையைப் பத்தி மூச்சு விடமாட்டேன். நீ எது செய்தாலும் குடும்பத்துக்கு நல்லதுக்குத் தான் இருக்கும்" என்று மனதாரப் பாராட்டினான் சத்தியசீலன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^                     
         

       

1 comment:

  1. அறிவும் , திறமையும் இணைந்த புத்திசாலித்தனம்..!

    ReplyDelete