Pages

Sunday 27 July 2014

இறந்தாலும் வரும் வாரிசு! சிறுகதை

இறந்தாலும் வரும் வாரிசு!

சிறுகதை 


மதுரை கங்காதரன்  

" இந்த நிலைமையிலே எனக்குக் இன்னொரு கல்யாணம் தேவைதானம்மா? அது ஏமாத்துறதா ஆகாதா? இப்போ எனெக்கென்ன குறைச்சல் ? நான் சந்தோசமா இல்லையா என்ன? நீங்களே சொல்லுங்க. பொழுதை நல்லபடியா கழிக்கிறதுக்கு என்கிட்டே படிப்பு இருக்கு. கைவசம் கைத்தொழில்கள் பல இருக்கு. அதையெல்லாம் மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆர்வமும் இருக்கு. அந்த சுகம் போதும் எனக்கு !" என்று நியாமான மனிதத்தன்மையோடு சொன்னாள் பாரதி.

"எதும்மா ஏமாத்துறது? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்த மாதிரி கொடுத்து உன் கணவரை அற்ப ஆயுசோட உன்னை விதவையாக்கி  தன்னோட அழைச்சுகிட்டாரே அந்தக் கடவுள் செஞ்சது மட்டும் ஏமாத்துறதா ஆகாதா?  திறமைகள் பலது உன்கிட்டே இருக்கு. அது எனக்குத் தெரியும். மக்களுக்கு சேவை செய்யும் குணம் உனக்கு சின்ன வயசிலிருந்து இருக்குன்னும் தெரியும்! ஆனா அதனாலே உன் வயிறு நிரம்புமா? உனக்கு இப்போ சின்ன வயசு. உனக்கும் ஒரு பாதுகாப்பு அவசியம். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாங்க உன்னை பார்த்துட்டு இருக்க முடியும்? உனக்குன்னு ஒரு புதிய வாழ்க்கை காலம் தாழ்த்தாம அமைச்சுகிட்டாத் தான் உனக்கு நல்லது. ஒரு பொண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் கூடாது தான். ஆனா நீ ஓரளவுக்கு வாழ்க்கையை அனுபவிச்சு குழந்தை குட்டின்னு இருந்திருந்தாக் கூட ஏதோ அவங்களைப் பார்த்துகிட்டே ஒரு வகையான ஆறுதலோட வாழ்க்கையை ஒப்பேத்தலாம். அப்படி எதுவுமில்லாம இருக்கிறதாலே தான் நாங்க அவசரப்படுறோம். நாங்க இருக்கும்போதே உனக்கு பிடிச்சாப்பிலே உன்னோட ஆசையை நிறைவேத்துகிறவரைப் பார்த்து உனக்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திட்டா எங்க கடமை நல்லபடியா முடிஞ்சிடும்" என்று அவளை பலவற்றை சொல்லி சமாதானப்படுத்த முயலுவாள் பாரதியின்  அம்மா.


"அவரோட கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அவரை மறக்கமுடியல்லேம்மா. எனக்குன்னு ஒரு ஆசை இருக்காதா? என்னை கட்டிக்கப் போறவர் என் எண்ணங்களுக்கு ஒத்துவந்தால் கூட ஏத்துக்கலாம்.  ஆனா எனக்கென்னமோ நான் போடும் கண்டீசனுக்கு அவர் ஒத்துவருவாரான்னு தெரியலே. அப்படி ஒத்து வந்தாத் தான் எனக்கு மறுமணம். இல்லாட்டி இல்லை தான்' என்று கறாராய் சொல்லிவிட்டாள் பாரதி.

"இப்போவாவது ஏதோ ஒருவகையிலே ஒத்துகிட்டேயே அதுவரைக்கும் எனக்கு சந்தோசம். அவருக்கும் உன்னைப் போல சில வைராக்கியம் இருக்கிறதாலே தான் நாங்களும் சம்மதிச்சோம். அவோரோட பெயர் கண்ணன் " என்று புதிர் போட்டார் பாரதியின் அம்மா.

"அப்படி என்னம்மா அவரோட வையாக்கியம்? கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க" என்று ஆர்வத்துடன் கேட்டாள்.


"அவருக்கும் உன்னைப் போலவே எப்போதுமே சமூகத் தொண்டு செய்யறது தான் பிடிக்குமாம். அதாவது பிறருக்கு கல்வி கற்றுக்கொடுப்பது, சிறிய தொழில் சொல்லிக்கொடுப்பது, ஏழைகளுக்கு நோட்டு, புத்தகம், துணிமணி கொடுப்பது, சிலருக்கு கல்விக்கட்டணம் கட்ட உதவுவது, கணினி பயன்பாடு சொல்லிக்கொடுப்பது இது போன்ற பல உதவிகள் செய்வாராம்!" என்று சற்று பெருமையாகவே சொன்னாள்.

"அம்மா ! அதுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கும் என்னம்மா சம்பந்தம். தண்ணிக்கும் மண்ணுக்கும் முடிச்சு போடுறாப்பிலே இருக்கு!" என்று சற்று சலித்துக்கொண்டாள்.

"சொல்றேன். அதுக்குள்ளே என்ன உனக்கு அவசரம். இந்த காரணத்தினாலே அவரு தன்னோட கல்யாணத்தைப் பத்திக் கவலைபடாமே ஒரு பேச்சிலரா காலத்தை தள்ளிக்கொண்டே வந்திருக்கிறார். ஒருசமயம் ஏதோ ஒரு சமூகநலக் கூட்டத்திலே அவரு பேசிகிட்டே இருக்கும் போது யாரோ ஒருவர் 'சமூகநலத்தைப் பற்றி இவ்வளவு அருமையாப் பேசுறீங்களே ! எல்லாமே சரி தான். உங்களுக்கும் மக்கள் சமூகத்துக்கு மேலே உண்மையான அக்கறை இருந்தா, எங்கே உங்களாலே ஒரு விதவை பொண்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? தம்பி ! உன்னைப்போல பல பேர் இதை விட நல்லா பேசியிருக்காங்க. ஆனா செயல்னு வந்துட்டா எட்டிப்போய் விடுவாங்க!' என்கிற அந்த வார்த்தைகளை இன்று உனது மூலமா செயல்படுத்திக் காட்டணும்னு துடிக்கிறார். அதாவது உன்னைப்போல ஒரு விதவைக்குத் தான் வாழ்வு கொடுக்கணும்னு இத்தனை நாளா கல்யாணத்தைத் தள்ளிபோட்டுகிட்டே வந்திருக்கிறார். இப்போதான் அவருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கப் போகுதுன்னு நான் நினைக்கிறேன். இந்த கல்யாண ஏற்பாடு  நாங்க வற்புறுத்தி செஞ்சது கிடையாது. அவங்களாகவே அன்போடு கேட்டதாலே தான் எங்களாலே தட்டமுடியல்லே. நானும் உங்க அப்பாவும் எல்லாவிததிலேயும் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம்" என்று தனக்குத் தெரிந்ததை அனைத்தையும் பாரதியிடம் கூறினாள்.


"ஆயிரம் நீங்க சொன்னாலும் எனக்கு என்னமோ ஏதோ ஒரு சின்ன அதிருப்தி இருக்கு" என்று மீண்டும் தன் எண்ணத்தை பகிர்ந்து கொண்டாள்.   

"ஒண்ணு செய்யுறோம். அவரும் உன்கிட்டே ஏதோ பேசணும்னு சொல்றார். அப்போ உன்னோட அபிப்பிராயமும் அவர்கிட்டே சொல்லு. பிறகு நீ ஒரு நல்ல முடிவுக்கு வரலாம்" என்று யோசனை சொன்னாள்.

கண்ணனின்  எண்ணம் 'பாரதியிடம் எல்லாமே கல்யாணத்திற்கு முன்னால் பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கும் நல்லது. பின்னால் எந்தவித பிரச்னையும் வராது' என்கிற சிந்தனையுடன் போகலாமா வேண்டாமா ? என்று பலமுறை யோசித்த பிறகு ஒருநாள் பாரதி வீட்டிற்குச் சென்றார்.   

"பாரதி இருக்காங்களா? அவங்கிட்டே ஒரு பத்து நிமிசம் பேசணும்" என்று அனுமதி கேட்டு இருவரும் பேசினார்கள். 

"எனக்கு பாரதியோட பேசினதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. என் வருங்கால வாழ்க்கை என்னான்னு இப்போத் தான் தெரிஞ்சுகிட்டேன். சீக்கிரமே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திடுறேன்" என்கிற உறுதியளித்த பிறகு கிளம்பினார் கண்ணன்.    

அந்த சந்திப்பு பாரதிக்கு ஒரு புது தெம்பைக் கொடுத்தது. தான் நினைக்கும் வாழ்வு கிடைத்திருப்பதை எண்ணி மனமெல்லாம் பூரித்துப் போனாள்.

"என்னம்மா. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ..  திருப்தியில்லைன்னு சொன்னே.. இப்போ எந்த சொக்குபொடி போட்டு உன்னை மயக்கினாரோன்னு எனக்குத் தெரியாது. உன்னோட மனசு இப்போவாவது ஒத்துகிடதே பெரிய விசயம். மேற்கொண்டு ஆகவேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்" என்று மனப்பூர்வமாக மகிழ்ச்சி அடைந்தாள் அவள் அம்மா.      


பாரதிக்கு முதல் கல்யாணம் , இரண்டாண்டுக்கு முன்பு நடந்தது. அழகான மாப்பிள்ளை, மிக நல்ல குணம், கை நிறைய சம்பளம், கௌரவமான குடும்பம், திருமணம் பத்து பொருத்தம் பார்த்து அனைவரின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தது. ஆனால் திடீரென்று அவருக்கு இதய நோய் தாக்கியதால் கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்து அவளின் வாழ்க்கை இருள் சூழ்ந்து விட்டது போலாகிவிட்டது என்றே சொல்லலாம். இத்தனை நாள் தனக்கு மறுமணம் வேண்டாம் என்று சொல்லியும் அவளின் அம்மா, அப்பா பிடிவாதமாய் அவளுக்கேத்த ஒரு நல்ல வரனை பார்த்து சம்மதிக்க வைத்தனர். வேறு வழி தெரியாமல் அவளும் ஒப்புக்காக ஒத்துக்கொண்டாள்.

நிச்சயதார்த்த விழா கலைகட்டியிருந்தது. எல்லோரும் இந்த அதிசய நிகழ்ச்சியை ஆவலோடு கண்டுகளிக்க வந்திருந்தனர். முக்கியமாக பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மற்றும் அவர்களது மனநிலை எப்படியிருக்கும்? அவர்களுக்கிடையே உண்டாகும்  அபூர்வ உணர்வைப் பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பவர்கள் மிகவும் அவசரப்பட்டனர் என்றே எண்ணிக்கொள்ளலாம். 

"சற்று நேரத்தில் மாப்பிள்ளையும் பொண்னும்  ஒரே இடத்தில் இருந்த காட்சி அனைவரையும் அதிசயிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி இருவருக்கும் பிடித்த காரணத்தினால் தான் என்னவோ இருவரின் முகத்தில் பிரகாசம் பொங்கி வழிந்தது. உணர்வுகள் பீறிட்டு வந்ததன் காரணமாக இருவரின் முகமும் சிவந்து இருந்தது. இனிதாக விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையில் தான் அந்த சம்பவம் நடந்தது.

திடீரென்று பாரதி "அம்மா , எனக்கு மயக்கமும் வாந்தியும் வருது" என்று சொல்லிக்கொண்டே கைகழுவும் தொட்டியில் வாந்தியெடுத்து மிகவும் சோர்வாக உட்கார்ந்துவிட்டாள்.

அங்குள்ள அனைவருக்கும் என்ன செய்வதென்று கை கால் ஓடாமல்   பதறினார். இத்தனை குழப்பத்திற்கு மத்தியில் அரசல்புரசலாக "ஒருவேளை அதுவாயிருக்குமோ? யார் கண்டது? ம் .... நாம நினைச்சதெல்லாம் நடக்கவாப்போது ?" என்று எரிகின்ற தீயில் கூட கொஞ்சம் எண்ணையை ஊற்றி வேடிக்கை பார்த்தனர்.

பாரதியின்  அம்மா அப்பாவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் " மாமா ! ஒண்ணுதுக்கும் பயப்படாதீங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்று அவர்களைத் தேற்றினார். அதற்குள் ஒரு அனுபவமிக்க மூதாட்டி ஒருவர் அவளின் கை நாடி பிடித்தபடி " சந்தேகமில்லை. இவள் கர்ப்பமாயிருக்கிறாள்" என்று சொல்ல அதைக் கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.


"என்ன கர்ப்பமா?" என்று பாரதியின் அம்மா அப்பாவுக்கு வயிற்றில் புளி கரைத்தது. எல்லோரும் ஒவ்வொரு விதமாய் கற்பனை செய்து பேச பேச அவைகளைக் கேட்டு கூனிக்குறுகி நின்றனர். எப்படி இது நடந்தது என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. ஏனெனில் பாரதியின் கணவர் இறந்து இரண்டு வருடமாகிவிட்டது. பின் எப்படி இவள் கர்ப்பம் ? ஒருவேளை தவறான வழியில் சென்றிருப்பாளோ? என்று ஆளுக்காள் அவர்கள் வாய்க்கு வந்ததை அனாவசியமாகப் பேசினார்கள். பிறரின் மனதை புண்படுத்தும் கலை சொல்லியாத் தரவேண்டும். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த மாப்பிள்ளை அனைவரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததார்.

" ஆமாம் .. இவள் கர்ப்பமாவாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவள் வயிற்றில் இருப்பது அவளது வாரிசு தான்" என்று கேட்ட அனைவருக்கும் அதிசயமும் ஆச்சரியமும் தந்தது.

'என்ன சொல்லுகிறான். அவள் வயிற்றில் சுமப்பது. அவளோட வாரிசாம்? அதை நாம நம்பனுமாம்' என்று முணுமுணுத்தனர். பாரதியின் அம்மா அப்பாவிற்கும் தன் மாப்பிள்ளை என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் முழித்தனர்.

"எல்லோரும் நான் சொல்வதை கவனமாக் கேளுங்க. நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரதி வீட்டிற்கு போயிருந்தேன். இந்த கல்யாணத்தில் அவளுக்கு நம்பிக்கையும், தைரியமும் தருவதற்கு போயிருந்தேன். பல விசயங்களைப் பகிர்ந்துகிட்டோம். அவளோட முதல் கணவரின் நினைவுகளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருதாள்.  அதை மட்டும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பேச்சுவாக்கிலே ஒருசமயம் அவளும், அவரோட கணவரும் இங்கிருக்கும் மழலை ஆஸ்பத்திரிக்கு போனதா சொன்னாள். அது ஒரு 'விந்து வங்கி'. அதிலே இவள் கணவோரோட விந்துவும் கொடுத்திருக்கிறார். அங்கே போய் பார்த்த பிறகு அது உண்மை எனத்தெரிந்தது. எனக்கு ஒரு யோசனை வந்ததது. ஏன் அதைக்கொண்டு அவளுக்கு அவளுடைய வாரிசைத் தரக்கூடாதுன்னு நான் நினைச்சேன். அப்போ அதை அவங்ககிட்டே இந்த மாதிரி சொன்னேன்.

"பாரதி! நான் ஒண்ணு சொல்வேன். நீங்க அதை கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. நீங்க விருப்பபட்டால் உங்களுக்கு உன் கணவரின் நினைவுப் பரிசாக அந்த விந்து வங்கியில் இருக்கும் உன் கணவரின் விந்தைக்கொண்டு உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னேன்.

"அதெப்படிங்க முடியும்?" என்று பாரதி சந்தேகப்பட்டாள்.

"எனக்கு என்னோட வாரிசு தான் வேணும்னு இல்லை. ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டவங்க சிலர் இருக்கிறாங்க. ஆனா அதுக்கும் ஒருபடி மேலே அவங்களோட வாரிசை இந்த நவீன விஞ்ஞானத்தின் மூலமாக் கொடுத்தால் இன்னும் சிறப்பாகும் உங்களுக்கும் பரம திருப்தியாகவும் இருக்குமில்லையா" என்றேன். 

"அந்த யோசனை பாரதிக்கு மிகவும் பிடித்து போயிடுச்சு. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் பக்கபலமா இருப்பதாகச் சொன்னேன். அந்த எதிரொலி தான் இந்த சம்பவம்" என்று நவீன விஞ்ஞான வளர்ச்சியை எடுத்துச் சொல்ல எல்லோருக்கும் மகிழ்ச்சி ஒருபுறம் அடைந்தாலும் நெகிழ்ச்சி ஒருபுறமும் அடைந்தனர். சிலருக்கு அவர் சொல்லியது புரியாமலும் தவிர்த்தனர். கட்டாயம் அவர்கள் பிறரிடமோ அல்லது வலை தளத்தில் மூலம் தெரிந்துகொள்வார்கள்.


இவ்வளவு குழப்பமும் அவர் தெளிவுற எடுத்துச் சொல்வதற்கு பின்னர் திட்டமிட்டபடி அந்த விழா இனிதே முடிந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சியும் தந்தது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%     

No comments:

Post a Comment