Pages

Monday 9 June 2014

திறமைசாலிகள் தினம் ! (பரிந்துரை நாள் - ஜூன் மாதம் 10ம் நாள்) சிறுகதை

திறமைசாலிகள் தினம்  ! 
(பரிந்துரை நாள் - ஜூன் மாதம் 10ம் நாள்) 
சிறுகதை
மதுரை கங்காதரன் 

"ராச ரத்தினம்! இன்னைக்கு  என்னோட புரோகிராம் என்னென்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?" என்று தன்னுடைய நிறுவனத்தின் மேலாளரிடம் கேட்டார் அதன் எம்.டி யான தொழிலதிபர் புகழேந்தி.


"சார், ஒரே ஒரு புரோகிராம் தான். இன்று மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை 'கிங் மெட்ரோ' ஹோட்டலில் நடைபெறும் தொழிலதிபர்கள் கூட்டத்திற்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் அதோடு தலைமையுரை ஆற்றனும்" 

"ஆமாம் .. ஆமாம்..அது ஒரு முக்கியமான கூட்டம். என்னை மீண்டும் தலைவராக தேர்ந்தேடுக்கப்படனும்னா நான் அங்கு நல்லா பேசியாகணும். ...ம்... அதுக்கு எல்லாமே  தயாரா இருக்கா ?"

"எல்லாமே தயார் தான் சார் ..ஆனால் .. ஆனால் " என்று மெல்ல இழுத்தார்.

"என்ன ஆனால்? ஒண்ணு உருப்பிடியா செய்ய மாட்டீங்களே ? என்ன பிரச்னை?"

"சார், வழக்கமா வருகிற கார் டிரைவர் இன்றைக்கு லீவு. அதனாலே .. அதனாலே .." மீண்டும் இழுத்தார்.

"அதனாலே கார் என்னையே ஓட்டிட்டு போகச் சொல்றீயா?"

"சார், அப்படியில்லே. அவருக்குப் பதிலா நம்மோட அலுவலகத் தொழிலாளர் பரமசிவம் வருகிறார்"


"என்னமோ செய்யுங்க. தொழிலாளிங்களை கண்டிப்போடு வைச்சுக்கணும். நாம என்ன சொல்றோமோ அதுபடித் தான் அவங்க நடக்கணும். புரியுதா? அவங்க இஷ்டப்படி நாம ஆடக்கூடாது. பின்னாடி நாம தான் கஷ்டப்படவேண்டியிருக்கும்.அது என்னமோ உனக்கு மட்டும் தொழிலாளிங்க மேலே அவ்வளவு அக்கறை எப்படித் தான் வருதோ? ஆனா ஒண்ணு மட்டும் தெரியல்லே! என்னை விட தொழிலாளிங்க உன் மேல தான் அதிக அளவு  பாசம் வைச்சுருக்காங்க"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்"

"சரி, சரி. நான் கூட்டத்திலே பேச வேண்டியது என்னவென்று குறிப்பு எழுதி வைச்சிருக்கிறாயா?"

"எல்லாமே காரிலே வைச்சிருக்கேன் சார்" என்று பதில் சொல்லிவிட்டு  பரமசிவத்தை மட்டும் தனியே அழைத்து "சிவா, நம்ம எம்.டி. எப்படிப்பட்டவர்ன்னு உனக்கு நல்லத் தெரியும். ஏடாகூடமா எதுவும் பண்ணிடாதே. அப்பறம் என்னோட வேலைக்கு ஆபத்தா முடிஞ்சிடும்"

"அப்படியெல்லாம் நடப்பேனா பாஸ். நல்லபடியா நடந்து உங்க பேரை காப்பாற்றுவேன் " என்று விடைபெற்றுவிட்டு விறு விறுவென்று எம்.டி.வருவதற்கு முன் காரை எடுப்பதற்கு தயாராக உட்கார்ந்தான். 

"என்னப்பா உன் பேர் என்ன ? ம்..ஆமாம் .. பரமசிவம். வண்டி நல்லா ஓட்டத் தெரியுமா? என்ன கார் வைச்சிருக்கே?"

"ஓட்டத் தெரியும் சார். ஆனா என்கிட்டே கார்,  டூ-வீலர் கூட இல்லை சார். எப்போதும் பஸ்ஸிலே ஆபீசுக்கு வருவேன் சார்"

"சரி, சரி காரை எடு. நேரா ஹோட்டல் தான்" என்று கட்டளை போட பூ போல மென்மையாய் கார் ஓட ஆரம்பித்தது. அவன் காரை ஒட்டிய பாங்கு அவரை வெகுவாக கவர்ந்தது.   

அதேசமயத்தில் பரமசிவத்திற்கு அன்று  இந்த எம்.டி யுடன் நடந்த நிகழ்ச்சி பசுமையாய் நினைவுக்கு வந்து மின்னல் போல் மறைந்தது.

"மேனேஜர், நான் கேட்ட அந்த ஸ்டேட்மெண்ட் ரெடியாயிடுச்சா. உடனே கொண்டுவாங்க" என்று சற்று அதட்டிக் கேட்டார் எம்.டி.

"சார்.. சார் வந்து.."

"என்ன வந்து... சொல்லித் தொலைய்யா"

"இன்னைக்கு அக்கௌன்ட்ஸ் மேனேஜர் லீவு. அதனாலே அவரோட அசிஸ்டன்ட் பரமசிவம் கிட்டே அந்த வேலை சொல்லியிருக்கிறேன். இப்போ கொண்டுவந்துடுவார்" என்று சொல்லி முடித்துச் செல்ல 'டான்' என்று பரமசிவம் எம்.டி முன் நின்றார்.

" சாரி சார். கொஞ்சம் தாமதமாயிடுச்சு"

"எங்கே ஸ்டேட்மெண்ட்டை  காட்டு ! எப்படி தயார் பண்ணியிருக்கிறாய்ன்னு பார்ப்போம்?" என்று முதல் பக்கத்தைப் பார்த்தார். பார்த்தவுடன் கோபம் தலைக்கு ஏறியது.

"என்ன மேன். நான் எப்படி ரெடி பண்ண சொன்னேன். நீ என்ன பண்ணியிருக்கே? போய் நான் எப்படி சொன்னேனோ அப்படி பண்ணிட்டு உடனே வா " என்று வார்த்தைகளை அனலாய் கக்கினார்.

"சார். இந்தாங்க சார். நீங்க சொன்னபடியும் பண்ணியிருக்கிறேன்" என்று கொஞ்சமும் தாமதிக்காமல்  மறுகையில் தயாராக இருந்ததை எம்.டி.யிடம்  கொடுத்தார்.


அதை பார்த்தவுடன் "இது தான் நான் எதிர்பார்த்தேன்" என்று அந்த ஸ்டேட்மெண்ட்டை கொஞ்சம் கவனமாக பார்க்க  அவரின் முகம் சுருங்கியது. இது அவ்வளவு தெளிவாக இல்லையே. சரி, நீ எப்படி எடுத்திருக்கிறேன்னு பார்ப்போம். எங்கே உன்னோடது?"

"இந்தாங்க சார்" என்று பணிவோடு கொடுத்தார்.


அதை பார்க்க பார்க்க அவருடைய மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது. அவருடைய முகம் பரவசமடைந்தது. 'அருமை.. அருமை.. இதுநாள் வரை இப்படிப்பட்ட பிரசென்டேசன் யாருமே கொடுத்ததில்லை' என்று அவர் மனம் பாராட்டினாலும், அவர் வாய்"சரி,சரி..வைச்சுட்டு போ" என்று எதுவுமே கூறாமல் அவரை அனுப்பி வைத்தார்.

இப்படி ஓடிய அவர் மனம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது தான் தாமதம்..

"ஆமாம் , உன்னை எதுக்கோ எப்போதோ சந்திச்சிருக்கிறேனே ?" என்று ஆழ்ந்து யோசிக்க
 
"சார் அந்த ஸ்டேட்மெண்ட் ... விசயமா"

"ஓ .. . ஞாபகம் வந்திருச்சி .. பரவாயில்லை. நல்ல பண்ணியிருந்தே" என்று அப்போதும் வாய் நிறைய பாராட்டாமல் பெயரளவிற்குப் பாராட்டினார்.

அதற்குள் கார் ஹோட்டலை நெருங்கியது.


"பரமசிவம். எனக்கு ஒருமணி நேரமாவது ஓய்வு வேண்டும்" என்னாலே சரியா கூட நிற்க முடியலே. அவ்வளவு அசதியாய் இருக்கிறது" என்று சொன்னதைக் கேட்டவுடன் பம்பரமாய் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து அவரை எவ்வித இடைஞ்சல் இல்லாமல் அமைதியாக தூங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். ஒருமணி நேரம் ஆனது. கைபேசி அலாரம் கத்தியது. எம்.டி. எழுந்திருக்க முயற்சி செய்தார். முடியவில்லை. அவர் தடுமாறுவதைப் பார்த்த பரமசிவம்

"சார்..சார் மெல்ல சார்..ரிபிரஸ் பண்ணிட்டு வாங்க எல்லாம் சரியாகிவிடும்" என்று  தன்னம்பிக்கை கொடுத்தும்  

"ஐ கான்ட்... ஐ கான்ட்..ஐ நீட் ஸ்டில் மோர் ரெஸ்ட் " என்று கூறி விட்டு "டு ஒன் திங்க். என்னோட டிரஸ் போட்டுக்க பரம சிவம். அந்த பைலில் நான் பேசப் போகும் விஷயம் இருக்கு. அதை அப்படியே ஒப்பித்தால் போதும். சரியாக அரைமணி நேரம் தான் பேச வேண்டும்" என்று அவரை முடிந்தளவு தயார் படுத்தி கூட்டத்திற்கு அனுப்பிவைத்தார்.

கூட்டமே தொழிலதிபர் புகழேந்தியின் வரவிற்காக எதிர்ப்பார்த்து ஏமாந்தது. இருப்பினும் ஒவ்வொரு முறையும் அவரின் கேட்டு சலித்தவர்கள் புதிதாக வந்திருப்பவர் என்ன பேசப்போகிறாரோ என்று ஆவலுடன் இருந்தனர். விழா பொறுப்பாளர் ஒலிபெருக்கியின் முன் நின்று " தொழிலதிபர்கள் கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு. அதாவது நமது தலைவர் திரு புகழேந்தி அவர்களுக்கு திடீரென்று உடல்நிலை சரியின்மையால் அவரின் சார்பாக அவரின் பிரதிநிதியாக அவர் நிறுவனத்தில் பணிபுரியும் திரு பரமசிவம் அவர்கள் பேசுவார்" என்பதற்கு பதிலாக அரங்கம் இன்னும் சற்று அமைதியில் மூழ்கியது.


இறைவணக்கத்துடன் ஆரம்பித்த விழா ... பரமசிவம் முறை வந்தது. வழக்கம் போல தலைவர் எழுதி வைத்ததை அதை அப்படியே படிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கையில் எவ்வித குறிப்பும் இல்லாமல் அவர் ஆரம்பித்த விதம் அனைவரையும் வியக்க வைத்தது. அதாவது "தொழிலின் வெற்றி எதில் இருக்கின்றது என்றால்  நம்முடன் இருக்கும் தொழிலாளிகளின் பலத்தையும் , எதிராளிகளின் பலவீனத்தை பொறுத்து இருக்கின்றது. அதோடு நில்லாமல் நம்மைச் சுற்றி நடக்கும் விசயம், அரசியல் மாற்றம், வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் உலகளவில் தினமும் நடைபெறும் பலவிதமான தொழில்களில் காணப்படும் ஏற்ற இறக்கங்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்" என்று பேச பேச எல்லோரும் அவரை வைத்த கண் மாறாமல், காதை கூர்மையாக்கி அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் மனதில் பதிய வைத்துக் கொண்டனர்.


ஹோட்டல் அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த புகழேந்தி தனது உடல்நிலை சற்று தேறியதாக உணர்ந்து நேரத்தை பார்த்தவுடன் பதறினார்.'ஐயையோ அரைமணி நேரம் தாண்டியும் ஏன் பரமசிவம் இன்னும் காணவில்லை? ஒருவேளை நான் போகாமல் இருந்ததால் ஏதாவது இசகுபிசகாக நடந்திருச்சா..என்ன தான் நடக்குதுன்னு ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம்' என்று வந்திருப்பவர்களுக்கு தன்னை அடையாளம் தெரியாதவாறு மிகச் சாதாரண உடையில் கூட்டத்தில் கலந்துகொண்டார். 


பரசிவம் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்தபோது அவருக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. துடிப்பான பேச்சு, மிடுக்கான பாவனையுடன் இன்னும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தபோது 'அரைமணி நேரம் கடந்தும் இன்னும் பரசிவம் பேசுவதை நிறுத்தவில்லையே. ஒருவேளை விழா பொறுப்பாளர் இதை கவனிக்கத் தவறிவிட்டாரா? என்று அவர் யோசிப்பதற்குள் விழா பொறுப்பாளர் மீண்டும் ஒலிபெருக்கியை கையில் எடுத்துக்கொண்டு " உங்களுக்கு ஒரு நற்செய்தி. பொதுவாக இந்த கூட்டத்தில் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட நேரம் அரைமணி நேரம் தான். ஆனால் எல்லோரும் ஒட்டுமொத்தமாக கேட்டுக்கொண்டதன் பேரில் மேலும் அரைமணி பேச வேண்டும் என்று அன்புக்கட்டளைக்கு திரு பரசிவம் அவர்கள் ஏற்பார்" என்று சொன்னவுடன் மீண்டும் புத்துணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.


"இன்றைய உலக கோடீஸ்வரர்கள் இந்த நிலைக்கு வர எளிதாக சாதித்துவிடவில்லை. ஆரம்ப நாட்களில் அவர்கள் பலவித இன்னல்களை அனுபவித்தவர்கள்" என்று ஒருசிலரின் வாழ்க்கை வரலாற்றை கதையாக சொல்ல அனைவரின் உடம்பும் புல்லரித்தது. 

உரை முடிந்தவுடன் விழா பொறுப்பாளர் அனைவரிடத்தில் பொதுவாக "உங்களுக்கு தொழில் ரீதியாக என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றதோ இவரிடத்தில் தாராளமாகக் கேட்கலாம் " என்று அறிவிக்க ராசரத்தினம் மிரண்டு போனார். 'இவரிடத்தில் கேள்விகளைக் கேட்டால் சரியான பதில் சொல்வாரா?நன்றாக மாட்டிக்கிட்டோம்' என்று தனக்குள் புலம்பினார். ஆனால் எல்லோரும் பிரம்மிக்கும் அளவுக்கு அவரின்  பதில் தெளிவாகவும், சுருக்கமாகவும் இருந்தது. பிரிய மனமில்லாமல் அனைவரும் பிரிந்து சென்றனர். இவ்வளவையும் ஓரத்தில் இருந்து பார்த்த புகழேந்தியின் கண்களின் முதல்முறையாக கண்ணீர் எட்டிப்பார்த்தது. தான் பார்த்ததை, கேட்டதை ஏதும் முகத்தில் காட்டாமல் அமைதியாக அன்று பொழுது கழிந்தது.

மறுநாள் எம்.டி. புகழேந்தி தன் இருக்கைக்குச் செல்வதற்கு முன்னால் "மேனேஜர் நீங்க உடனே என்னோட கேபினுக்கு வாங்க.ஒரு முக்கியமான விசயம் பேசவேண்டும் " என்று மரியாதையுடன் பேசிய எம்.டி யை அனைவரும் அதிசயமாகப் பார்த்தனர்.

'ஆஹா .. பரமசிவம் நேத்து ஏதாவது சொதப்பிட்டானா? இன்னையோடு என்னோட வேலை காலி தான்' என்று சற்று நடுக்கத்துடன் முகத்தில் வேர்வைத் துளியோடு அவரைப் பார்ப்பதற்கு தெம்பு இல்லாமல் தரையை பார்த்தவாறு நின்றார்.


"ராச ரத்தினம்.. நேற்று பரமசிவம் என்ன காரியம் பண்ணினார் தெரியுமா?"

புதிரோடு பேசியது அவரின் இரத்தக்கொதிப்பு மேலும் உயர்ந்தது.

நடந்ததை சொல்ல ராசரத்தினம் மகிழ்ச்சியின் எல்லைக்கு பறந்தார்.


"ராசரத்தினம், நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.  உங்க எல்லோர்கிட்டேயும் வெறும் 'ஆமாம் சாமி' என்பதைத் தான் எதிர்பார்த்தேன். என்கிட்டே வேலை பார்க்கிறவங்ககிட்டே இவ்வளவு திறமை இருக்கிறதான்னு என்னாலே கணிக்கவே  முடியல்லே. வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தன்னோட திறமை காட்டுறத்துக்கு வாய்ப்பு கிடைக்காதான்னு எவ்வளவு வருசம் ஏங்கிட்டு இருந்தாங்களோன்னு எனக்குத் தெரியாது .ஏன்  உங்ககிட்டே அவரைவிடத் விட  திறமை இருக்கிறதனாலே தான் அவரை அடையாளம் கண்டு என்னோடு அனுப்புனீங்க. தங்கத்தின் மதிப்பும், வைரத்தின் மதிப்பும் அதனோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனோட மதிப்பு தெரியாதவர்கள் அதை ஒரு கல்லாகவே மதிப்பார்கள் என்பதற்கு நான் தான் சரியான உதாரணம். உடனே தொழிலாளர் கூட்டத்தை கூட்டுங்க. அவங்களுக்கு முன்னால் பரமசிவத்தைப்  புகழ்ந்து சில வார்த்தைகள் பேசணும். இன்னும் எத்தனை பேர்கள் தங்கள் திறமைகளை ஒளித்து வைத்திருக்கிறார்களோ! தினமும் அவர்களிடத்தில் நான் பேசணும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று இப்போதே முடிவு எடுத்துட்டேன். உலகம் 'முட்டாள்கள் தினம்' கொண்டாடுது. ஆனா இந்த நாள் நாம் ஒவ்வொரு வருடமும் 'திறமைசாலிகள் தினம்' ன்னு கொண்டாடவேண்டும். அவர்களை இந்த நாளில் கௌரவிக்க வேண்டும். நம்மை பார்த்து மற்ற நிறுவனங்கள் கொண்டாட வேண்டும். பிறகு இந்த நாடும் உலகமும் கொண்டாடட்டும். இனிமேல் நானும் உங்கள்ளே ஒருவன். உங்களோடு வேலை செய்வதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்தவன்" என்று கூற ராசரத்தினத்திற்கு தான் காண்பது எல்லாம் கனவா? இல்லை நிசமா? என்று ஒரு முறை  சுயநினைவோடு யோசித்தார்.

************************************************************************************************************************   

No comments:

Post a Comment