Pages

Wednesday 26 February 2014

எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் ! அவங்களுக்கு போடுங்க ஓட்டு !

எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் ! 
அவங்களுக்கு போடுங்க ஓட்டு ! 
மீண்டும் உங்களுக்கு அடிக்கப்படும் ஆப்பு !

விழிப்புணர்வு கட்டுரை (ஒரு அலசல் - 
ஒரு கற்பனை)
மதுரை கங்காதரன் 

கூடிய விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. தேர்தல் சரித்திரத்தில் என்றுமே இல்லாமல் பலர் 'பிரதமர்' பதவிக்கு போட்டி போட முன் வந்துள்ளது இந்த முறை தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. முன்பு 'பிரதமர்' பதவிக்கு போட்டிபோடுவது அல்லது ஏற்றுக்கொள்வது பயப்படுவார்கள். தகுதி, வாய்ப்புகள் இருந்தும் பலர் அப்பதவி ஏற்பதை தவித்திருக்கிறார்கள். ஆனால் இப்போது பல கட்சிகளின் தலைவர்கள் 'பிரதமர்' பதவிக்கு போட்டியிட ஆசைபடுகிறார்கள். ஒருவேளை எம்.எம்.எஸ் கொடுத்த நம்பிக்கை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. 
அவரே பொம்மை அரசியலை பேசாமல், பேச்சு மூச்சில்லாமல் தலை,கை,கால் ஆட்டிக்கொண்டே யாரையும், எதைப் பற்றியுமே அதிகம் கவலைபடாமல், மக்களின் நலன்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் , யார் எதை செய்தாலும் கண்டும் காணாமல், தேர்தலில் நின்று போட்டி போட்டு வெற்றி பெறாமல் பத்து வருடம் ஆட்சி செய்து சும்மா சொல்லக் கூடாது. நம் மக்களுக்கு பூமியிலும் பொறுமை இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும். 

அவருடைய கவனம் முழுவதும் நாட்டு மக்கள் நலனில் இருந்ததைக் காட்டிலும் கட்சித் தலைவியை நோக்கியே இருந்தது என்று தாராளமாகக் கூறலாம். கிளிப்பிள்ளை போல அப்படியே செய்து உலக சாதனை படைத்து மக்கள் முகத்தில் கரியை பூசினார் என்று சொன்னால் மிகையாகாது. பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது அரிது. மக்களிடம் வோட்டுக்களை கேட்டது அதனினும் அரிதோ அரிது. கூட்டத்தில் பேசினாலும் எழுதிக் கொடுத்ததை முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் அவரால் தான் பேச முடியும். அவரையே ஏற்றுக்கொண்ட மக்கள் வேறு யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார்கள். 

சமீப காலமாக  'ஆம் ஆத்மி கட்சி'யின் தலைவர் மற்றும் அதன் தொண்டர்கள் தங்களால்  முடிந்த மட்டும்  பல கட்சிகளில் எதிர்ப்புகளை சமாளித்தும், பல விமர்சனங்களை தாங்கிக்கொண்டும் ஊழல் , லஞ்சம் இல்லாத ஆட்சி கொடுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு  பண பலம், ஆள் பலம்,  கவர்ச்சி பலம், மீடியாக்கள்  பலம் கொண்ட பல கட்சிகளுக்கு நன்றாகவே தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறார். தினம் தினம் மக்களின் பார்வைகளை தன் பக்கம் ஏதாவது ஒன்றை செய்தும் , சொல்லியும் இழுத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் முன் பங்கு பெறும் பேட்டிகள், மீடியாக்களின் பேட்டிகள் எல்லாமே பொறுமையாக சிரித்த முகத்துடன் ஆணித்தரமாக பேசுவது பல தலைவர்களை மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு அந்த கட்சித் தலைவரின் செல்வாக்கு அதிகமாக்கிக் கொண்டே இருக்கின்றது. 

யாருமே செய்வதற்கு பயப்படுவதை அவர் சர்வசாதாரணமாக செய்கிறார்கள். பொதுவாக பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்க்கு  கூட்டணி கட்சிகள் மிரட்டினால் பணிவதும், அவர்களுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டும், பல சலுகைகளை கொடுத்து எப்படியாவது பதவியில் இருக்க ஆசைபடுவர். ஆனால் ஆம் ஆத்மி கட்சி,   தன்னுடைய கட்சி லஞ்சம் , ஊழல் இல்லாத அரசியல் தான் விரும்புகிறது . 'எனக்கு பதவி ஆசை இல்லை. கூட்டணி கட்சிகளுடன் பண பேரம் பேசி என் பதவியை தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை ' என்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இரு பெரும் கட்சிகளின் உண்மை சொரூபத்தை மக்களுக்குக் காட்டினார். இப்போது இருக்கும் கட்சிகள் எல்லோருமே பணம் படைத்தவர்கள் பக்கம் சாய்ந்து இருக்கிறார்கள்' என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்துப் பார்ப்போம்.


இங்கு ஒன்றை கவனிக்கத் தவறக்கூடாது. அதாவது சில சிறிய / பெரிய கட்சிகள் எல்லோருமே தங்களுக்கென்று தனி மீடியாக்கள் இருக்கின்றனர். அந்த கட்சி நடத்தும் கூட்டம் / பேட்டி ஆகியவை பெரும்பாலும் அவர்களுடைய மீடியாக்களில் தான் பிரமாதமாக காட்டுகிறார். ஆனால் அவைகளை அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்களே பார்ப்பதில்லை. ஒரே வீட்டில் ஒரே கட்சிதான்  இருக்கும் நிலை இன்று இல்லை. ஆகவே அவர்கள் ஒலி - ஒளிபரப்புவது எல்லாமே ஒரு விளம்பரம் என்று மக்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். மேலும்  வீட்டில் டி.வி  ரிமோட் பெரும்பாலும்  குழந்தைகளிடமல்லவா  இருக்கின்றது. ஆனால் 'ஆம் ஆத்மி' கட்சியின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட எல்லா மீடியாக்களும் ஒளிபரப்புகிறார்கள். ஆகவே அதை கிட்டத்தட்ட எல்லோரும் பார்த்து வியக்கிறார்கள். அந்த கட்சிக்கு விளம்பரமும் அதிகம் கிடைக்கின்றது. அநேகமாக இதைப் பார்த்த பிறகு மற்ற கட்சியினரும் 'ஏன் தான் நாம் மீடியாக்கள் ஆரம்பித்தோம்' என்று கட்டாயம் புலம்புவார்கள்?   

பலவித பிரச்சனைக்கும், சவால்களுக்கு நடுவேயும் , பலவித விமர்சனத்திற்கு ஆளாகியும், அதற்கெல்லாம் கவலை கொள்ளாமல் மக்கள்  நலன் ஒன்றே என்னுடைய லட்சியம் என்று மற்றவைகளை இகழாமல் இரவு பகல் பாராது அயராது பாடுபட்டு , ஒரு 'டீ' விற்றவர்  தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்து வெற்றிகரமாக செயல்பட்டு தன் மாநிலத்தை நாட்டில் முதலாவதாக  கொண்டுவந்ததோடு இப்போது அனைவரும் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இப்போது பிரதமர் பதவிக்கு முற்றிலும் தகுதியுடையவராக மாறி  'அவர் கட்டாயம் அமோகமாக வெறி பெற்று நாட்டு மக்களுக்கு விமோட்சனம் கொடுக்கவேண்டும்' என்று பலரும் ஆசைபடுவது கண்கூடாகத் தெரிகின்றது.

இதற்கிடையில் எந்த ஒரு தகுதி, திறமை இல்லாமல் வெறும் பணம் மற்றும் அதிகாரபலத்துடன் மக்களின் கஷ்டத்தை கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் 'பிரதமர்' பதவியை வம்படியாக திணித்து நாட்டு மக்களை ஒருவழியாக்க கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள் கட்சியின் இளவரசர்.

இவர்களைத் தவிர சில மாநில முதல்வர்களும் பிரதமர் பதவிக்கு போட்டிபோட இருக்கிறார்கள். 
இவர்களில் யார் வெற்றி பெறப்போகிறார்களோ ? அவரிடத்தில் தான் நம் நாட்டின் எதிர்காலம் இருக்கின்றது. இது நம் நாட்டிற்கு கிடைக்கும் கடைசி வாய்ப்பு. இதை எப்போதும்போல எண்ணி அஜாக்கிரதையாக இருந்தால் நம் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது! இனிமேல் நடை பெரும் ஐந்தாண்டு ஆட்சி தான் நாட்டின் செழிப்பிற்கும் அல்லது அழிவிற்கும் நிர்ணயம் செய்யும் நேரம். வல்லரசு நாடுகள், அண்டை நாடுகள் நம்மை அவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு நம்மை கைபொம்மையாய் அவர்களின் இஷ்டப்படி  ஆட்டிப்படைக்கிறார்கள்.  அதை முறியடிக்க வீரமிக்க, துணிவுமிக்க, இரும்பு மனிதத் தலைவரால் மட்டுமே முடியும். மற்ற நாடுகளுக்கு 'ஜால்ரா' அடிக்கும் தலைவர்கள் நமக்குத் தேவையில்லை. மக்களே ! அது நாம் அளிக்கும் ஓட்டுகளில் இருக்கின்றது.           

   

எப்படியும் மக்களாகிய பலர் பணமில்லாத மக்களுக்காக சேவை செய்யும் ,பல நேர்மையான வேட்பாளரை தேர்ந்தெடுக்கமாட்டீர்கள் ! தங்கள் தொகுதியில் யார் நிற்கிறார்கள் ?அவர் நம் தொகுதியைச் சேர்ந்தவர் தானா? அவர் எப்படிப்பட்டவர் ? என்று பலருக்குத் தெரிவதில்லை. 'ஏதோ தலைவரை பிடித்திருக்கின்றது. ஆகையால் அந்த சின்னத்திற்கு ஒட்டு போடுகிறேன்' என்று கண்மூடித்தனமாக வாக்களிக்கிறார்கள். சிலர் யார் கவர்ச்சியாக அல்லது வாக்குக்கு பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ஓட்டு போடுகிறார்கள். 'இப்படித் தான் நடக்கும்' என்று பொதுவாக மக்களுக்கும் மற்றும் தேர்தலில் போட்டி போடும் அனைவருக்கும் தெரியும். எம்.எல்.ஏ , எம்.பி பதவிகள் அலங்காரப் பதவிகளாகிவிட்டது. யார் தேர்தலில் அதிகமாக செலவு செய்ய முடியுமோ' அவர்களுக்குத் தான் 'சீட்' கிடைக்கிறது.   

ஆகவே ஒரு புதுமைக்காக இப்படி வாக்காளர்களிடம் 'வாக்குகளைச்' சேகரித்தால் என்ன !!!

வாக்காளப் பெருமக்களே ! உங்கள் அன்புள்ள , நேர்மையான வேட்பாளர் அதாவது தொடர்ந்து பல முறை சுயேட்சையாக போட்டியிட்டு அனைத்து தடவையும்  'டெபாசிட்' இழந்த நான்  மீண்டும் ஒருமுறை தேர்தலில் இந்த தடவை போட்டியிடுகிறேன். 

இந்தமுறை நான் உங்களுக்காக இதைச் செய்வேன் ! அதைச் செய்வேன் என்று வாய்கிழிய பேசி உங்களை போரடிக்கப் போவதில்லை. ஒரு புதுமைக்காக என்னை எதிர்த்து போட்டி போடும் நண்பர்களுக்காக உங்கள் பொன்னான வாக்குகளை கேட்க இருக்கிறேன். அனேகமாக தேர்தல் சரித்திரத்தில் இப்படி எதிராளிக்கு வாக்குகளை கேட்பது இதுவே முதல் முறையாக இருக்கும். நீங்கள் படியுங்கள் ... விவரம் பிறகு தெரிய வரும்..


என் இனிய வாக்காளர்களே ! எல்லோரும் 'தனக்குத் தான் வாக்குகளை போடவேண்டும்' என்று கூறுபவர்களுக்கு மத்தியில், அழகாக அடுக்கு மொழியில் பேசுபவர்களுக்கு மத்தியில், சிலர் வாக்குகளுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மத்தியில், இலவசங்களை வாரி வாரி கொடுப்பவர்களுக்கு மத்தியில், பல வாக்குறுதிகளை  அள்ளி அள்ளி வீசுபவர்களுக்கு மத்தியில், கண் கவர்ச்சிகளைக் காட்டி மக்களை தன் பக்கம் இழுப்பவர்களுக்கு மத்தியில், எந்த பெரிய சிறிய கட்சிகளின்   தயவும் இல்லாமல் கட்சி நோட்டீஸ் கொடுக்காமல் , போஸ்டர் ஒட்டாமல் , தோரணம் கட்டாமல் , பந்தாவாக பிரச்சாரம் செய்யாமல்  ஒரு நேர்மையான சராசரி மனிதன் உங்கள் முன் ஒட்டு கேட்க வந்திருக்கிறேன்..

* ஒவ்வொருமுறையும் 'நாங்கள் இந்த முறை விலைவாசிகளை குறைத்தே தீருவோம்' என்று  ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லிச் சொல்லி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு ஏழை , எளிய, நடுத்தர மக்களைப் பற்றி நினைக்காமல் விலைவாசிகளை மீண்டும்  மீண்டும் பன்மடங்கு ஏற்றி மக்களின்  வாழ்வில் தொடர்ந்து மண் அள்ளிப் போடுகின்றவர்களுக்கே இம்முறையும் நீங்கள் ஓட்டு போடுங்கள். கட்டாயம் இப்போது இருக்கும் விலைவாசி ஏறுவது போதாது என்று மேலும் 'ஜெட்'  வேகத்தில் விலைவாசிகளை இன்னும் அதிகமாக ஏற்றுவார்கள் 


* பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் , எரிவாயு சிலிண்டர்களின் மான்யங்களைக் குறைத்து அவைகளின் விலையினை மாதம் இருமுறை ஏற்றுவதற்கு பதிலாக வாராவாரம் ஏற்றி மக்களின் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ள வேண்டுமா?  எதிர் கட்சியினருக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்! 

* வருமான வரிவரம்பை உயர்த்தாமல் நடுத்தர மற்றும் அடிமட்ட உழைப்பாளர்களின் இரத்தத்தை மேலும் உறிஞ்ச அவர்கள் ஈட்டும் வருமானத்தில் மென்மேலும் புதிய வரிகளை போடவேண்டுமா ? அதாவது நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அரசுக்கே கொடுக்கச் செய்யும் 'வருமான வரிச் சட்டம்'  உடனே செயல்படுத்த மீண்டும் எதிரணிக்கே நீங்கள் ஓட்டு போடுங்கள். உங்கள் வருமானத்தை வரியாக அதிகம் அதிகம் அரசுக்குச் செலுத்துவதற்கு உதவிசெய்வார்கள்.

* ஒவ்வொரு சிறு சிறு வேலை முதல் பெரிய காரியம் வரைக்கும் கணக்குபோட்டு வெளிப்படையாக லஞ்சம், ஊழல் வாங்கி மக்களை அல்லாட வைக்க வேண்டுமா? யோசிக்கவே வேண்டாம் ! எனக்கு போட்டியாக இருப்பவர்களுக்கே உங்கள் ஓட்டை போடுங்கள். நாடு இன்னும் பள்ளத்தில் விழுவதற்கு வழி செய்து கொடுங்கள.

* கறுப்பு பணம் இன்னும் அதிகமாக 'சுவிஸ்' வங்கியில் பதுக்கி, நாட்டை மேலும்  ஏழை நாடாக ஆக்குவதற்கு அவர்களுக்கே ஓட்டு போடுங்கள்.

* ரயில், பஸ் , விமான கட்டணங்களை படிப்படியாக  உயர்த்துவது  போதாது என்று அவைகளை மாதாமாதம்  தாறுமாறாக உயர்த்தி உங்களை தினமும் ஓட ஓட விரட்டச் செய்ய வேண்டுமா ? தாராளமாக எனக்கு ஓட்டு போடவேண்டாம். 

* குடிநீர், சாலை வசதி, மின்சாரம் வேண்டியளவு கிடைக்காமல் தினம் தினம் திண்டாட விடுமா ? கவலை விடுங்கள் ! இப்போது இருக்கும் திண்டாட்டம் போன்று மேலும் பத்து மடங்கு திண்டாடச் செய்ய தயவு செய்து என்னைத் தவிர வேறு யாருக்கேனும் ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

* தரம் பற்றி கவலைகொள்ளாமல் , கல்விச் சேவையை வியாபாரமாக ஆக்கி கல்விக்கட்டணங்களை இஷ்டம் போல் உயர்த்தி, பணம் படைத்தவர்களுக்கே கல்வியும், வசதி இல்லாதவர்களுக்கு கல்விக்கடன் கூட கிடைக்காமல் செய்ய வேண்டுமா ? கவலை விடுங்கள். என்னுடன் போட்டி போடுபவருக்கு உங்கள் வாக்கு செல்லட்டும். உங்கள் பிள்ளைகளை கூடிய விரைவில் ஆடு, மாடு மேய்க்க வழிவகைகளைச் உடனே செய்து முடிப்பார்கள்.

* பாராளுமன்றம் / சட்ட சபையில் மக்கள் குறைகளை பேசாமல் இருக்க , தலைவருக்கு குல்லா போட , வாரிசு அரசியலையும் , குடும்ப அரசியலையும் பேராதரவு கொடுத்து நாட்டை முன்னேற  விடாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டுயது , எனக்கு ஓட்டு போடாமல் மற்றவருக்கு உங்கள் வாக்குகளை மறக்காமல் போடுங்கள். இனிமேல் சத்தியமாக எந்த ஒரு ஏழை அல்லது சாதாரண மனிதனும் அரசியலில் பதவிக்கு வராமல் இருக்க உதவி செய்வார்கள்.

* பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க, ஏழைகளை பரம ஏழைகளாக்க உங்கள் வாக்குகளை என்னுடன் போட்டு போடும் வேறு யாருக்காவது நீங்கள் ஓட்டளியுங்கள். கூடிய விரைவில் நாட்டை மேலும் கடன்கார நாடக்கிவிடலாம்.

* தகுதியில்லாதவர்களுக்கு, குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கும்,  பணக்காரர்களுக்கும், ஏழைகளைப் பற்றி கவலை கொள்ளாதவர்களுக்கும், நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்பவர்களுக்கும் உங்கள் ஓட்டை மறக்காமல் போட்டால் கட்டாயம் அவர்கள்  நாட்டை சீக்கிரம் அடைமானம் வைப்பதற்கு ஏற்பாடுகள் பல செய்வார்கள்.                  

* உடலை அழிக்கும் போதை மற்றும் உயிர் கொல்லி  பொருட்களின் விற்பனை இலக்கை மென்மேலும் உயர்த்தி வீட்டிற்கும் , நாட்டிற்கும் கேட்டை உண்டாக்க நீங்கள் செய்ய வேண்டியது எனக்கு எக்காரணம் கொண்டும் ஓட்டு போடக்கூடாது. 

* தொழில்களையும், தொழிலாளர்களை விலைவாசிகள் மூலம் நசுக்குவதோடு , அந்நிய முதலீட்டை மென்மேலும் பெருக்க கண்டிப்பாக எனக்கு ஓட்டு போடக்கூடாது. யார் இதை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கே உங்கள் பொன்னான ஓட்டுகளை போடுங்கள். 


* இப்போதே பாதி பொருளுக்கு வரிகள் விதித்துவிட்டார்கள். மீதி இருப்பதிற்க்கும் வரிகள் விதிக்க வேண்டுமல்லவா ? அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமல்லவா? ஆகவே எல்லா பொருளுக்கும் வரிகள் விதிக்க உங்கள் ஓட்டு அவங்களுக்கே போடுங்க ! அப்போதுதான் வரிகள் கட்டி நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கஷ்டப்படுவார்கள். வரிகளை கட்டாமல் பணக்காரர்கள் நன்கு சம்பாதிப்பார்கள். 

* விவசாய தொழிலுக்கு முழுக்கு போடவைத்து வெறும் ரியல் எஸ்டேட், கடன்  மற்றும் ஐ.டி தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல விவசாயிகளை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்து மடங்குகளாக்க என்னைத் தவிர வேறு ஒருவருக்கு உங்கள் வாக்கு செல்லட்டும்.

* ஊக வணிகத்தில் , பங்கு வர்த்தகத்தில் கவர்ச்சி காட்டி பலரை ஆண்டி , போண்டி ஆவதை அதிகம் படுத்த எதிரணிக்கு ஓட்டு போடுங்க.

* ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று பிறகு பணம் கொடுக்கும் கூட்டணிக்கு மாறும் பச்சோந்தி அரசியல் தலைவர்களுக்கு இன்னமும் மதிப்பு கொடுத்து மக்களை மடையர்களாக்கியவர்களுக்கு மீண்டுமவர்களுக்கு தவறாமல் ஓட்டு போடுங்க ! மக்களை முட்டாளாக்க ! 

* மீனவர்கள், காவேரி, முல்லைப்பெரியாறு, சேதுசமுத்திரம், அணுமின்நிலையம்   போன்ற பிரச்சனைகளை தீர்க்காமல் மீண்டும் ஜவ்வாய் இழுக்க அவர்களுக்கே மீண்டும் ஓட்டு போடுங்க !

* இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறியாக்கவும் ,  வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகவும் பணமுள்ளவர்களைக் கொண்டு அரசியல் பண்ணுபவர்களுக்கு உங்கள் வாக்குகள் செல்லட்டும்.  


*திரைப்படத் துறையினரை, விளையாட்டுத் துறையினரை திருப்திபடுத்த, முக்கியமானவர்களை தன பக்கம் இழுக்க பல கலை நிகழ்ச்சி மற்றும் சலுகைகள் கொடுக்க உடனே எதிரணிக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள். கொஞ்சமும் நான் கவலை படமாட்டேன்.   

* மக்கள் நலத்திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு, அரசு செலவில் வெளிநாடு மற்றும் பல சலுகைகளை மென்மேலும் அனுபவித்திட அவர்களுக்கு போகட்டும் உங்கள் ஓட்டு.   

* வழக்குகள் உரிய நேரத்தில் முடிக்காமல் ஜவ்வாய் இழுக்க , மறக்கடிக்க நீதிபதிகளை நியமிப்பதை தள்ளிப்போடும் 

* 'ரெய்டு' என்கிற பெயரில் தங்களுக்கு வேண்டாதவர்களையும், தங்கள் ஆட்சிக்கு கைகொடுப்பவர்களை விட்டுவிட்டும், எதிர்ப்பவர்களை பழிவாங்குவதற்கு என்று 'காமெடி' பண்ணிக் கொண்டிருக்கும் அரசியல் ஆட்சியாளர்களை மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுத்து  உலக நாடுகள் கைகொட்டி சிரித்து முழு நீள காமெடி ஆக்குவதற்கு உங்கள் ஓட்டுகளை அவர்களுக்கே போடுங்க !
* ஆசிரியர்கள் தேர்வு , அரசு பதவி தேர்வு போன்ற அரசுத் தேர்வுகளை ஒரு சில சில இடங்களுக்காக பல லட்சம் பேர்களை எழுத வைத்ததோடு , முடிவுகளை இன்று / நாளை அறிவிக்கப்படும் என்று முடிவு அறிவிக்காமல் எழுதிய எல்லோருக்கும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் காட்சிகளை மீண்டும் தொடர அவர்களுக்கே நீங்கள் ஓட்டுப் போடுங்கள்.

* மொத்தத்தில் நீங்கள் ஓட்டுப்போடும்போது குறைந்தபட்சம் நல்ல சேவை மனப்பான்மை உள்ளவர்களை, மக்களை எளிதாக  அணுகுபவரை, அன்றாடக்  குறைகளை கேட்டறிந்து அதை உரிய நேரத்தில் தீர்த்துவைத்து மக்களுக்கு குறைந்தபட்சம் குடிநீர், கல்வி, மின்சாரம் , போக்குவரத்து ஆகியவைகளை தடையில்லாமல் குறைந்த செலவில் கிடைப்பதற்கு பாடுபடும் வேட்பாளரைக் கண்டறிந்து அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் கட்டாயம் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


ஆகவே கட்டாயம் ஓட்டு போடுங்கள் !
உங்கள் குடும்பம் செழிக்க !
மக்களுக்காக  உழைப்பவர்களைப் பார்த்து !
வாழ்க மக்கள் ! வாழ்க நம்  அரசியல் !! 
வாழ்க நம் தலைவர்கள் !!!  
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^   

       
   

No comments:

Post a Comment