Pages

Saturday 14 December 2013

நல்லாட்சி மலர தேவை அரசியல் விழிப்புணர்வு! - NEED POLITICAL AWARENESS !

நல்லாட்சி மலர தேவை  அரசியல் விழிப்புணர்வு!
NEED POLITICAL AWARENESS !

 இன்றைய   தேர்தல் புதுக்குறள் 
வலைதளத்தில் வலம் வருவோரே தேர்தலில் வெற்றி கொள்வர் 
மற்றவர்  டெபாசிட் இழந்து தோற்பர்.
  
சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 'ஆம் ஆத்மி கட்சி'  என்கிற சமீபத்தில் உதயாமான புது கட்சி இரு பெரும் தேசியகட்சிகளை எதிர்த்து அவர்களுடைய பணபலம்,   அதிகாரபலத்தையும்   தாண்டி எளிய மக்களைக்கொண்டு மிகக்குறைந்த காலத்தில் பெரிய சரித்திர வெற்றியைப் பதித்ததற்குக் காரணம் அவர்களின் அணுகுமுறை தான். அதாவது எல்லாமே வெளிப்படையாகவும், மக்களை மூளை முடுக்குகளில் சென்று நேரில் சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சனைகளை அதாவது அரசியலில் மலிந்து கிடக்கும் லஞ்சம் ஊழல்,  மின்சாரம், குடிநீர் போன்றவைகளை தேர்தல் சமயத்தில்  மட்டுமில்லாமல் அதற்கு முன்னமே கேட்டறிந்து மக்களின் ஒட்டுமொத்த குரலாய் அவர்கள் ஓங்கி ஒலித்த அந்த ஒலி ஒவ்வொரு மக்கள் காதில் விழுந்து அதுவே அவர்களுக்கு ஒட்டு போடவைத்தது. அதுவும் டெல்லி சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.  இவர்களுக்கு உதவியாக சில மீடியாக்கள் இருந்ததென்னவோ உண்மை. 
இத்தகைய அந்த செயல்முறைகள் மற்ற கட்சிகளுக்கும் பெரிய கிலி ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இனிமேல் தொகுதிக்கு வராமல் / படுத்துக்கொண்டே யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது. யார் தினமும் மக்களை சந்தித்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்குத் தான் வெற்றியைத் தருவார்கள்.மேலும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேர்மையாகவும், ஊழல்,லஞ்சத்திற்கு எதிராகவும், மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று மிகவும் எதிர்பார்கிறார்கள். அது தவிர வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய முழுவிவரங்களையும் வலைதளத்தில் வெளியிட வேண்டு மென்று  நினைக்கிறார்கள். தலைவராக பார்த்து தேர்தலில் நிறுத்துவதை மக்கள் அறவே மறுக்கிறார்கள். மக்களே தகுதியுள்ளவர்களை  பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இப்போது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு வந்துவிட்டது என்று கருதலாம். ஒருவேளை இவற்றிற்கெல்லாம் மசியாது பழைய பத்தாம்பசலித்தணமாய் தேர்தலில் சந்தித்தால் பலன் கண்டிப்பாக பூஜ்யம் தான் கிடைக்கும். தோற்ற பிறகு அவர்களின் செயல்முறைகளை மாற்றிக்கொள்வதோ, காரணம் கண்டுபிடிப்பதோ , ஆராய்வதோ ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால் இதுநாள் வரை என்ன நடந்துள்ளது. இனி எப்படி நடந்து கொண்டால் அரசியல் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சம் பார்க்கலாம்.  
இதுவரை ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் தலைவர்கள் / தொகுதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் இஷ்டம் போல் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதை கவனித்திருக்கிறோம் ! பார்த்தும் இருக்கிறோம்! ஆனால் வெற்றி பெற்றவுடன்  வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு அவர்களின் வருமான வேலைகளை சரியாக செய்து சொத்து மேல் சொத்து சேர்த்து வருவதை சில ஊடகங்கள், மீடியாக்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

இன்னும் சொல்லப் போனால் சில வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் தலைவைத்து கூட  படுப்பதில்லை. மேலும் சட்டசபைக்கு தவறாமல் செல்வதில்லை. சென்றாலும் மக்கள் குறைகளை பேசுவதில்லை. அன்றாடம் மக்கள் சந்தித்துவரும் குடிநீர், மின்சாரம், சாக்கடை, ஆக்கிரமிப்பு, கல்வி, போக்குவரத்து, சாலை, ரேசன் விநியோகம், விலைவாசி, வெள்ளம், வறட்சி, தொழில், கடன், வேலைவாய்ப்பு போன்ற சிறுசிறு பிரச்சனைகள் வந்தால் கூட அந்த தொகுதி எம்.எல்.ஏ அல்லது எம்.பியோ  தலைகாட்டுவதில்லை.  ஆனால் தினமும் தலைவர்கள் தவறால் ஏதாவது ஒரு பிரச்சனை / பல பிரச்சனைகளைப் பற்றி பேசி வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால் தலைவர்களுக்கு அந்த தொகுதி வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட அதிகம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. 

தினசரியில் படிக்கிறோம். வெறும் தலைவர்கள் மட்டும் பேசினால் போதுமா? தொகுதி வேட்பாளர்கள தொகுதி மக்களுக்கு என்ன சேவை செய்கிறார்? என்னென்ன வசதிகள் செய்து தருகிறார்?  மக்களின் அன்றாட பிரச்சனைகள் (குடிநீர், மின்சாரம், கல்வி போன்றவை)  எவ்வாறு தீர்க்கிறார் என்கிற விவரம் மக்களுக்குத் தெரியாத ஒன்றாக இருக்கின்றது. மேலும் சொந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களே தங்கள்  தொகுதிக்குச் செல்வதில்லை. வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் எப்படி அந்த தொகுதிக்குச் சென்று மக்களின் குறைகளைத் தீர்ப்பார்கள்? பல தொகுதி பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களும், பத்திரிக்கைகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட மனிதன் தான் கவலை படுகிறார்கள். அதன் பலனாக ஒரு சில குறைகள் தீருவதென்னவோ உண்மை தான்,
ஆனால்  சும்மா சொல்லக் கூடாது. பொது தேர்தலோ அல்லது இடைத்தேர்தல் வரும்போது அரசியல் தலைவர்கள் சரி, அமைச்சர்கள் சரி மற்றும் தொகுதி வேட்பாளர்கள் சரி எல்லோரும் மக்களைச் சந்திக்கத் தவறுவதில்லை! தேர்தல் முடிந்துவிட்டால் மக்களை 'அம்போ' என்று விட்டு விடுவார்கள்!   

அதற்கெல்லாம் ஒரே காரணம் மக்கள் ஒட்டு போடும்போது நல்லாட்சி கொடுக்க விரும்பும் வேட்பாளர்களைப்   பற்றிய எல்லா விவரங்கள் தெரியாவிட்டாலும் குறைந்தபட்ச விவரமாவது ஓட்டு போடும் மக்களுக்குத் தெரியவேண்டுமல்லவா? ஆனால் வேட்பாளர்களை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் நேர்முகம் காணல் மூலம் அவர்கள் நினைக்கும் தகுதி உள்ள வேட்பாளர்களைத்  தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க வைக்கிறார்கள். அதாவது வேட்பாளர்கள் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு தகுதியாக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு விசுவாசகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தான் இது நாள் வரை கடைபிடிக்கிறார்கள். ஏன்? சில ஊடங்கங்கள் , சில மீடியாக்கள் , அரசு அதிகாரிகள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள்  பலவற்றை மறைத்து வருகிறார்கள்.
மக்களுக்காக சேவை செய்ய  விரும்புகிறவர்கள் நேர்மையாகவும், ஒளிவுமறைவில்லாமல்,  சாதி மத இன வேறுபாடில்லாமல்  பாரபட்சமின்றிநடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லையே? அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகள் கொஞ்சனஞ்சமா?  ராஜமரியாதை அல்லவா கிடைக்கிறது! வெறும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தை மட்டும் வைத்து மக்கள் கண்மூடிக்கொண்டு இதுநாள் வரை ஓட்டு போட்டுவருகிறார்கள். அதைப் பார்க்கும்போது முன்பு வாரிசு இல்லாத நாட்டில் ராஜா / ராணியைத் தேர்ந்தெடுப்பதற்கு பட்டத்து யாணை தும்பிக்கையில் மாலை கொடுத்து  ஒருவரை அதாவது அவர் ஆண்டியானாலும் சரி , செல்வந்தர் ஆனாலும் சரி , முட்டாளாக இருந்தாலும் சரி, கோழையாக இருந்தாலும் சரி  அவர் தான் நாட்டையும்  நாட்டு மக்களையும்  ஆளவேண்டும். அதிலும் ஒரு நல்லது இருக்கின்றது. அதாவது நாட்டை ஆள்பவர்களுக்கு கண்டிப்பாக வீரம் இருக்கவேண்டும். வீரம்  இருந்தால் தான் யாணையின் முன்னால் நிற்க முடியும். அது போடும் மாலையை ஏற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய இளைஞர்கள் கையில் தான் எல்லாமே இருக்கின்றது என்று சொல்லலாம். சமீபத்தில் நடக்கும் பல மாற்றங்களுக்கும் அவர்களே முக்கிய காரணம். அவர்களின் ஓட்டு தான் பல வெற்றியின் தலை எழுத்தை மாற்றிவிடுகின்றது. அவர்கள் பெரும்பாலும் கணினி மற்றும் வலைதளங்களில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அரசியல் கட்சி தலைவர்கள், தொகுதி வேட்பாளர்கள் வலைதளத்தில் வலம் வந்தால் அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதில் தங்களின் விமர்சனங்களை தருகிறார்கள். கேள்வியும் கேட்டு பதிலும் பெறுகிறார்கள். ஆக இன்றைய மக்கள் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை ஏதாவது ஒரு வலைதளத்தின் மூலம்  வேட்பாளர் எப்படிப்பட்டவர்? அவரின் நோக்கம் என்ன? எதிர்கால மக்களுக்கு அவர்  செய்யபோகும் திட்டங்கள் எவை எவை? அவரின்  படிப்பு , தொழில், சொத்து போன்ற விவரங்கள் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள ஆசைபடுகிறார்கள். அவ்வாறு மக்களுக்குத் தெரிந்தால் தானே  சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும்.  எதுவுமே தெரியாமல் ஓட்டுப்போடுவது பாழும்கிணற்றில் நாமே விழுவதை போன்றதாகும் என்று நினைக்க ஆரம்பித்து வருகிறார்கள்.  அதைவிடக் கொடுமை வேட்பாளர் தான் வெற்றி பெற்ற தொகுதி தனது சொந்த தொகுதி இல்லையென்று ஜெயித்த பின் மக்களுக்குத் தெரியவருகிறது. பின் எப்படி அந்த வேட்பாளர் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்த்துவைப்பார்? இன்றைய இளைஞர்கள் வேட்பாளர் மனுதாக்கல் செய்தவுடனே அவர் கீழ்க்கண்ட விவரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து அவர் நிற்கும் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்தில் ஒட்டிவைக்க வேண்டும் என்றும்  மேலும் வலைதளத்தில் வெளியிடவேண்டும் விருப்பப்படுகிறார்கள்.

இதோ இந்த படிவத்தின் மாதிரி (இதில் எது தேவை இருக்கின்றதோ அவைகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்)


1.  வேட்பாளர் பெயர்         :                       வேட்பாளர் புகைப்படம் 
2.  தற்போதைய முகவரி  :
3.  நிரந்தர முகவரி             :
4.  வயது    
5.  படிப்பு                               : 
6.  பொழுது போக்கு           :
7.  ஆரோக்கியம்                 :  
8.  குடும்ப உறுப்பினர்கள் :
9.  போட்டியிடும் சின்னம் :
10. சொந்த தொகுதியின் பெயர் :
11. குடும்ப உறுப்பினர் / உறவினர் தற்போது அரசியலில் இருக்கின்றனரா? 
12. தொழில் / பதவி பெயர் :
13.  தொழில் வரி / வருமான வரி கட்டுபவரா?
14. சொத்து / சமபளம்        :
15. குற்றப்பின்னணி  (ஏதேனும் இருந்தால்) விவரம்:
16. நிலுவை வழக்கு  (ஏதேனும் இருந்தால்)       :
17. பொது சேவை விவரம் (ஏதேனும் இருந்தால்)
18. தேர்தலில் நிற்பதன் நோக்கம்:
19. தொகுதியில் வருங்காலத் திட்டங்கள்:
20. இதற்கு முன் எம்.எல்.ஏ / எம்.பி உறுப்பினரா ?
21. எத்தனை ஆண்டுகள் :
22. சட்ட / பாராளுமன்றத்திற்கு சென்ற சதவீதம் :
23. மக்களுக்காக பேசியது எத்தனை முறை         :
24. தொகுதிக்குச் எத்தனை முறை சென்ற விவரம்:
25. மக்களுக்காக என்ன சேவை / வசதிகள் செய்துகொடுத்த விவரம்:
26. போராட்டத்தில் கலந்து கொண்ட முறைகள் :

மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் உண்மையே. ஏதேனும் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ஒருவேளை நான் பதவியில் இருந்தால் அப்பதவியை ராஜினாமா  செய்கிறேன். மேலும் நான் ஊழல் செய்ய மாட்டேன். லஞ்சம் வாங்கமாட்டேன். மக்களுக்கு பிரச்சனை கொடுக்கும் எந்தவகையான குற்றச்செயல் மற்றும் போராட்டத்தில்  ஈடுபடமாட்டேன். அப்படி ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் நான் என்  பதவியை ராஜினாமா செய்வேன். சட்ட / பாராளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பேன். தவறாது கூட்டத்திற்குச் சென்று மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லி அவற்றை தீர்த்து வைப்பேன்.அரசு கொடுக்கும் சலுகைகளை தவறாக உபயோகிக்க மாட்டேன். அரசு சொத்துக்களை காப்பேன்.

                                                                           இப்படிக்கு 
சாட்சிகள் :                               போட்டியிடும்  வேட்பாளர் கையெப்பம் 


இளைஞர்கள் இவற்றை கேட்பது எதற்காகவென்றால் வெற்றிபெற்ற வேட்ப்பாளர்கள் பலர் தாங்கள் பதவியில் இருப்பது மக்களுக்குத் தெரியாமல் இருந்துவிடுகிறது. சத்தமில்லாமல் 5 / 10 / 15 வருடங்களை பதவியில் இருந்துகொண்டு கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வளம் பெறுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை . சிலர் ஏதோ பிரச்சனையில் மாட்டும்போது தான் அவரின் உண்மையான பின்னணி அதாவது படிப்பறிவு இல்லாதவர் , குற்றப்பின்னணி உள்ளவர் என்று தெரியவருகிறது. 

எல்லாத்தையும் விட கூட்டணி பேரம் நடத்தும்போது மக்களை முட்டாளாகவே நினைக்கிறார்கள். மக்கள் விரும்பாத கட்சியில் கூட்டணி வைத்துகொள்ளும் சம்பவம் அதைவிட மக்களுக்குச் செய்யும்   துரோகம் வேறு எதுவுமில்லை.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமல்லவா? எத்தனைக் காலம் தான் இப்படியே ஆட்டுமந்தைகள் போல் ஆதிகாலத்து முறையைப் பின்பற்றுவது? ஓட்டு போடுவதில் மட்டும் மாற்றம் செய்வதோடு நில்லாமல் வேட்பாளரின் விவரங்களை அறியும் விதத்திலும் மாற்றம் மற்றும் விழிப்புணர்வு வேண்டும். 


ஆகவே மக்களே எல்லோரும் நலம் பெற , நல்லாட்சி பெற்றிட  இன்றே நாம்  அரசியலில் விழிப்புணர்வு பெறுவோம். நாட்டை லஞ்சம் ஊழல் இல்லாமல் புனிதமாக்குவோம். உலகத்தில் சிறந்த நாடு என்று பெயர் எடுப்போம்.

  நன்றி , வணக்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
                           

No comments:

Post a Comment