Pages

Monday 10 December 2012

உள்விதி மனிதன் பாகம்: 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், எண், ராசி- GOOD TIME MEANS GOOD PLAN

உள்விதி மனிதன்  


சமமனிதக் கொள்கை 

பாகம் : 36  திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து மற்றும் எண் ராசி 

- GOOD TIME MEANS GOOD PLAN


என் இனிய மனிதா! மீண்டும் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி  மனிதனின் ஜீவ ஓட்டம் பேசுகிறேன். இந்த உலகத்தில் எவ்வளவோ கெட்ட செயல்கள் கெட்ட மனிதர்களால் நடக்கின்றது. அவர்களையெல்லாம் நல்வழிக்கு கொண்டு வருவதற்கு ஏதேனும் உபாயம் இருக்கின்றதா! அல்லது அந்த மாதிரிக் கெட்ட செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு வழி ஏதாவது உண்டா? இல்லவே இல்லை! ஒருவேளை நீங்கள் அதற்குத் தான் 'சட்டம் - ஒழுங்கு - நீதிமன்றம்' இருக்கின்றது என்று பதில் சொல்லலாம். ஆனால் அவற்றின் செயல்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அவற்றின் பயம் மக்களிடையே போய்விட்டது. 

பெருமையுள்ள மனிதா! இன்று சட்டம்  வலியோர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கையில் அது கைப் பொம்மையாக இருக்கின்றது. அதனால் அம்மாதிரியான சிலர் எந்த ஒரு கெட்டச்செயலையும் துணிச்சலுடன் செய்துவிட்டு, ஒருவேளை அவர்கள் காவல்துறையால் பிடிபட்டுவிட்டால் அவர்கள் வழக்கறிஞர்கள் உதவியால் சட்டத்தின் ஓட்டைகளின் வழியாக  எளிதாகத் தப்பித்து வருகின்றனர். மனிதனே அவனாக 'இது செய்தால் தவறு' என்று எண்ணி தானாக  தவறு செய்யாமல் இருந்தால் ஒழிய தீய செயல்களை தடுக்கமுடியாது.

என் பிரிய மனிதா ! கெட்ட விஷயங்கள் நடக்காமல் இருக்க இதுவரை எழுதிய நூல்களிலும், பேசிய சொற்பொழிவுகளிலும், யாராவது செய்த செயல்களிலும், குருமார்கள், மகான்கள், முனிகள் போன்றவர்கள் எப்போதாவது தவறு செய்த மனிதர்களின் கூட்டத்தை அழைத்து அவர்களை நல்வழிக்கு கொண்டுவருவோம் என்று கூறியதுண்டா! இல்லவே இல்லை. அதாவது தீவிரவாதிகள், கைதிகள், கொலை கொள்ளை குற்றம் புரிந்தவர்கள் எல்லோரும் எதற்கும் துணிச்சல் மிகுந்தவர்கள். அவர்களில் காதில் எவ்வளவுதான் நல்லதை ஓதினாலும் அது செவிடன் காதில் சங்கு ஊதுவதற்குச் சமம். நல்லவர்களை உட்கார வைத்து நல்லதை சொல்லி அவர்களை நல்வழி படுத்திவிட்டேன் என்று சொல்வதில் ஏதேனும் பெருமை உண்டோ?


பெருமைக்குரிய மனிதா! நன்றாக படிப்பவனை அழைத்து அவனுக்கு வேளாவேளைக்கு 'டியுசன் ' சொல்லித்தந்து முதல் மாணவனாக வரச்செய்வது ஒரு சாதனையா? படிக்காத மாணவனை நன்றாக படிக்க வைப்பதல்லவோ சாதனை! ஆனால் எல்லா ஆசிரியர்களுக்கும் நன்றாகத் தெரியம். சுமாராக படிக்கும் பையனை வெற்றி மாணவனாக மாற்றுவது ஆயிரத்தில் ஒன்று தான் நடக்கும் என்று. பலர் பெரும்பாலும் ஆசியர்கள்  பாடுபடத் தயாராக இருப்பதில்லை. அப்படி செய்தாலும் பலன் மிக மிக அரிது.

சக்தியுள்ள மனிதா! அதுபோல் பெரிய பெரிய ஆன்மீகவாதிகள் என்று சொல்லிகொள்ளும் போலி ஆசாமிகள் யாராவது எப்போதாவது ஒரு ஏழையைப் பணக்காரனாக்கி இருக்கின்றனரா? அவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களைத் தான் மேலும் பணக்காரர்களாக்குவார்களே  தவிர ஏழையை அல்ல. என்னென்றால் பணக்காரனிடத்தில் தான் அதிக பலன் எதிர்பார்க முடியும். திடீர் பணக்காரர்கள் அனைவரும்  இத்தகைய போலி ஆசாமிகள் உதவியினால் அல்லது அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தாங்கள் பிறர்க்குச் செய்த நம்பிக்கை துரோகத்தை மூடி மறைக்கின்றனர். தங்களின் சுயநலத்தை அவர்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர். தங்களுடையப் பேராசை நிறைவேற்றும் பதவியினை அடையத் துடிக்கின்றனர். 


ஆற்றல் கொண்ட மனிதா! வெறும் பேச்சால், புத்தகங்களால், சொற்பொழிவு -களால், உருபோட்டு மனப்பாடம் செய்வதால் ஒருவனைத் திருத்த முடியாது. ஒரு மனிதன் தவறு செய்வதற்குக் காரணம் வளர்ப்பு, சூழ்நிலை, சேர்க்கை, காலாவதியான நடைமுறைக்கு ஒவ்வாதப்  பல சட்டங்கள், தவறான எண்ணங்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் / திரைப்பட நடிகர்கள், உண்மையை மூடிமறைத்து பொய்யை உண்மையாக்கி பரப்பிவரும் பல ஊடகங்கள், நல்ல செயல்களை ஊக்குவிக்காத நாட்டுத் தலைவர்கள் / அரசுகள், தகாத செயல்கள் பல செய்தும் பதவியினால் தண்டிக்காத நீதிமன்றம் போன்றவைகளாகும்.

பண்புள்ள மனிதா! இதற்காவா இந்த அதிசய உலகத்தில் அற்புத மனிதனைப்  படைத்தேன். மனிதா! ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள். அத்தகைய தவறு செய்பவனிடத்திலும் இந்த உள்விதி மனிதன் இருக்கிறான் இருப்பதை அவன் மறந்து விடுகிறான். அவனுடைய தவறுகளை நான் கணக்கிட்டுக்கொண்டு தான் வருகிறேன். அதற்கேற்ற தண்டனை கொடுக்கும் நேரத்திற்காகவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றியுள்ள மனிதா! இந்த மனித உலகத்தில் ஆசை உள்ளவன் பேராசைபடுகிறான். நல்லவர்களோ பலவற்றுக்குப் பயந்து தன்மானம், கெளரவம் தக்கவைத்துக் கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். ஈர மனம் படைத்தவர்களிடமிருந்து பணம் படைத்தவர்கள் இந்த உலகத்தை எப்போதோ பறித்துக்கொண்டு மற்றவர்களைக்  கைப்பாவையாய் அவர்கள் இஷ்டப்படி ஆட்டிப் படைத்து வருகின்றனர். அவர்களை அழிப்பதற்கு நேரம் வந்துவிட்டது. இனி இந்த உள்விதி  மனிதனின் அறிவும், ஆற்றலும் அவர்களை சும்மா விட்டுவைக்காது. கெட்ட செயல்களை செய்யும் மனிதர்களைக் கூண்டோடு அழியும் நேரம் வந்துவிட்டது. இப்போது கூட நேரம் கெட்டுப் போய்விடவில்லை. செய்த கெட்ட செயல்களை மறந்து நல்ல செயல்களைச் செய்து அதன் அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இது தான் இந்த உள்விதி  மனிதனாகிய நான் அவர்களுக்குத் தரும் இறுதி எச்சரிக்கையும், வாய்ப்புமாகும்.

பாசமுள்ள மனிதா! உன்னால் உழைப்பு மற்றும் முயற்சியில்லாமல் எந்த ஒருவனையும் செல்வ சீமானாக ஆக்க முடியாது. அப்படி நீ ஆக்க முடிந்தால் அது ஏமாற்றும் வழியன்றி நேர்மையான வழியாக இருக்காது. உன்னை முட்டாளாக்கி அவர்கள் பணம் சம்பாதிக்கும் வழியாகும். மனிதா! நீ உழைப்பினால் உயரும்போது நீ கீழே விழாமல் இருக்க நான் உன்னைத் தாங்கிக்கொள்வேன். அதேபோல் தீய வழியில் உயர நினைத்தால் உன்னை தூக்குவதுபோல் தூக்கி, நேரம் வரும்போது உன்னை 'பொத்'தென்று போட்டுவிடுவேன். அப்போது உன்னுடைய எலும்புகள் கூட மிஞ்சாது.


நேசமுள்ள மனிதா! நடப்பதெல்லாம் அவனுக்குத் தெரியும் என்றும் அவன் எப்போதும் எல்லோரையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்  என்று கூறிவருகின்றனர். உண்மையில் அவர்களுக்கு ஒரு தைரியம். நான்கு சுவர்களுக்குள் அல்லது இருட்டுக்குள் நடப்பதை யாராலும் பார்க்க முடியாது என்பதுதான். மனிதா! அதனால் பலவிதத் தவறுகள் செய்துவருகிறான். ஆனால் நான் உள்விதி மனிதனாக உள்ளே இருப்பதை மறந்துவிட்டுப் பலதவறுகள் செய்துவருகிறான்.


நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதா! உனக்குள்ளே இருக்கும் நான், எனக்குத்தெரியாமல் நீ யோசிக்க முடியாது. எந்த செயலும் செய்யவும் முடியாது. இனிமேலாவது தீய செயல்கள் செய்வதை நிறுத்திவிட்டு நன்மை தரும் நல்ல செயல்களை செய். உனக்கு நிரந்தர வெற்றியும், வாழ்கையில் முன்னேற்றமும் கிடைக்கும்.

நன்மை செய்யும் மனிதா! நேரங்களில் நல்ல நேரம், ராகு காலம், குளிகை, எமகண்டம், அமாவாசை போன்றவைகள் திட்டங்களின் மறுபெயர்களாகும். உனது திட்டம் வெற்றிபெறச் செய்யும் நம்பிக்கையாகும். நீங்கள் பல விசேஷங்களில் பார்த்திருப்பீர்கள். நல்ல நேரம் நெருங்க நெருங்க பரபரப்பு அதிகமாக இருக்கும். அந்த நேரத்திற்குள் அனைத்தையும் முடிக்கவேண்டுமமென்ற முனைப்பு இருக்கும். அப்படி ஒரு நேரம் இல்லையெனில் இஷ்டம் போல் திட்டமிடாமல் வேலைகளை செய்தால் மற்றவர்களின் வேலையும் கெட்டுவிடும்.


மகிழ்ச்சியான் மனிதா! அதுபோல் தான் வாஸ்து, எண் ராசி பலன் போன்றவை. உனது எண்ணத்தில் நம்பிக்கை கொடுப்பதின் பல்வேறு பெயர்கள். ஆனால் அது மட்டும் உனது செயலின் வெற்றிக்கு போதுமானது அல்ல. அவைகள் பணம் கொடுத்தால் கிடைத்துவிடும். ஆனால் உழைப்பு, தன்னம்பிக்கை, முயற்சி இருந்தால் மேற்கூறியதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை. அதற்காகப் பணத்தை வீணாக்காமல் நல்ல திடட்டமும், விடாமுயற்சி இருந்தாலே இந்த உள்விதி  மனிதன் உனக்கு வெற்றி கிட்டும்படி செய்துவிடுவான். இந்த உள்விதி மனிதனை நம்பினால் உனது ஜீவா ஓட்டம் தடையில்லாமல் ஓடும்.


உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்டம் இன்னும் தொடரும்.  



No comments:

Post a Comment